புத்தகத்திருவிழாவுக்கு வந்த பொதுமக்களின் பர்ஸ்களை திருடிய தொலைக்காட்சி நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் சர்வதேச புத்தக திருவிழா நடைபெற்றது. இந்த புத்தக திருவிழாவுக்கு வந்த தொலைக்காட்சி நடிகை ரூபா தத்தா என்பவர் அங்கு வந்த பொதுமக்களின் பர்ஸ்களை திருடியதாக தெரிகிறது .
இந்த நிலையில் அவரை பார்த்து சந்தேகம் அடைந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அவரை சோதனை செய்தபோது அவருடைய பல பர்ஸ்களும் ரூபாய் 75 ஆயிரம் பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரிடம் விசாரணை செய்தபோது குப்பை கூடையில் ஒரு பணப்பையை போட்டுவிட்டு அது உங்களுடையதா? என மக்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களது ஃபர்ஸ்களை திருடியதாக ஒப்புக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து நடிகை ரூபா தத்தா மீது ஐபிசி 379 மற்றும் 411 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நடிகை ரூபாதத்தாவின் இந்த திருட்டுக்கு வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
நடிகை ரூபா தத்தா ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக போலிக் குற்றச்சாட்டுக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.