பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை மேற்கொள்ளவிடாமல் தடுத்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அண்மையில் பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பான ஊடகவிலாளர் சந்திப்பை நடத்தியபோது, ஊடகவிலாளர்கள் சிலர் அசௌகரியங்களிற்கு உள்ளாகினர்.
சம்பவம் தொடர்பில் நான்கு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தலைவருக்கு அறிவித்துள்ளார்.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சமரவீர தனது பதவியை விட்டு விலகியதன் பின்னர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பிற்காக இலங்கை துறைமுக அதிகாரசபையின் பாதுகாப்பு அதிகாரிகள் ஊடகவியலாளர்களை வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாக தமக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் அபேகுணவர்தன மேலும் தெரிவிக்கையில், சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறும், அந்த நேரத்தில் கடமையில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் யார் என்பதையும், ஊடகவியலாளர்கள் வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியவர்கள் யார் என்பதையும் கண்டறியுமாறு துறைமுக அதிகாரசபையின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.