“மணிரத்னம், ரஜினி யாருமே ஜீவிக்கு கடைசி நேரத்தில் உதவி செய்யவில்லை” என்று இசை வெளியீட்டு விழா ஒன்றில் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசினார்.
இயக்குநர் ஆனந்த்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கடலை போட பொண்ணு வேணும்’. விஜய் டிவி அசார், யோகிபாபு, மனிஷா ஜித் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரோடு திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசும்போது, “திரைப்பட விழாக்களைப் பார்த்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மீண்டும் விழாக்கள் நடப்பது மகிழ்ச்சி. இந்தப் படத்தின் பாடல்கள் அருமையாக இருக்கிறது. தயாரிப்பாளர் நிறையச் செலவு செய்துள்ளார். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் நிறைய படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். ஒரு படம் எப்படி வியாபாரம் ஆகிறது என்பது தெரியும்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘நாயகன்’ படத்தை முதலில் நான் விநியோகம் செய்ய மாட்டேன் எனச் சொன்னேன். அவரது அண்ணன் ஜீவி “நீங்கள்தான் செய்ய வேண்டும்” என்றார். அதற்காகவே செய்தேன். ‘நாயகன்’ படம் எனக்கு லாபம் இல்லை. இங்குத் தயாரிப்பாளர்களை யாரும் மதிப்பதில்லை, யாரும் உதவுவதில்லை.
மணிரத்னம், ரஜினி யாரும் ஜீவிக்கு கடைசி நேரத்தில் உதவி செய்யவில்லை. இந்த நிலைதான் இங்கு இருக்கிறது. தயாரிப்பாளர் இல்லை என்றால் சினிமா இல்லை… இயக்குநர்கள், நடிகர்கள் இல்லை. தமிழ் மக்கள்தான் என்னை வாழவைத்தார்கள்” என்று கே.டி. குஞ்சுமோன் பேசினார்.
தயாரிப்பாளர் இல்லாமல் சினிமா இல்லை. தயாரிப்பாளரை ஏமாற்றாதீர்கள். அனைவரும் இணைந்து ஈகோ இல்லாமல் வேலை பார்த்தால் சினிமா ஒரு அருமையான தொழில். ஆனால், இங்கு அது நடப்பதில்லை. தயாரிப்பாளர் குஞ்சுமோன் வந்துள்ளார். இயக்குநர் ஷங்கரை உருவாக்கியவர், ஆனால் அவர் இப்போது படமெடுப்பது இல்லை. கோடிகளைக் கொட்டும் தயாரிப்பாளர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. தயாரிப்பாளருக்கு லாபம் வந்தால் மீண்டும் படம்தான் எடுப்பார்கள். ஆனால் ஹீரோவுக்கு கொடுக்கும் பணம் என்னவாகிறது? திரும்ப வருவதே இல்லை” என்றார்.