வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புக்களிற்கு எதிராக தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி செயலகத்தின் எதிரில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நாளை மறுநாள் (24) வியாழக்கிழமை இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் காணி அபகரிப்பு நடவடிக்கைகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
இதேவேளை, நேற்று திங்கட்கிழமையும் அமைச்சர் சமல் ராஜபக்சவின் அமைச்சு அலுவலகத்திற்கு எதிரில் போராட்டமொன்றை தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டிருந்தனர்.
வடக்கில் மகாவல் எல் வலயத்திற்குள் புதிதாக சுவீகரிக்கப்படவுள்ள காணிகள் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. அந்தந்த மாவட்டங்களின் அபிவிருத்திக்குழு கூட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு, நிலங்களை ஒதுக்குவதை தடுத்து வருகிறார்கள்.
இதையடுத்து, அனைத்து அரச அதிபர்களையும் சந்திப்பிற்கு அழைத்து, எதிர்ப்பை மீறி நிலங்களை மகாவலி எல் வலயத்திற்கு ஒதுக்கிக் கொடுக்குமாறு அமைச்சர் சமல் ராஜபக்ச அறிவுறுத்தவுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, இந்த போராட்டம் திட்டமிடப்பட்டது.
கூட்டம் நடக்கும் மண்டபத்திற்கு எதிரில் தமிழ் எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபடுவதென திட்டமிடப்பட்டது.
இந்த தகவல் வெளியானதாலோ என்னவோ, திடீரென அந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அரசாங்க அதிபர்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வடக்கு கிழக்கில் திட்டமிட்ட ரீதியில் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்பிற்கு எதிராக தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளை மறுநாள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.