வவுனியா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்காது சிங்களமொழி பறிக்கப்பட்ட கல்வெட்டை முன்னுரிமைப்படுத்தியமையை கண்டிப்பதாகவும் இவ்வாறான தமிழ் மொழி புறக்கணிக்கப்படும் நிகழ்வில் கலந்துகொள்ளப்போவதில்லை என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா பல்கலைக்கழகத்தினை சம்பிரதாயபூர்வமாக அறிவிக்கும் நிகழ்விற்கு ஜனாதிபதி நாளை கலந்துகொள்ளவுள்ளார்.
இந் நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் மூன்று மொழிகளிலும் தனித்தனியான கல்வெட்டுக்கள் அமைக்கப்பட்டிருந்தது.
இதனை ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார் நிலையில் குறித்த இடத்தில் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு முன்னுரிமைப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகத்தின் முகப்பு வாயிற்பகுதியை நோக்கியவாறு காணப்பட்டுள்ளது.
எனினும் அங்கு வந்த அதிகாரிகள் தமிழ் மொழியை பின்புறமாக அமைக்குமாறும் சிங்கள மொழியை முன்னுரிமைப்படுத்துமாறு கூறி குறித்த கல்வெட்டை உடனடியாக இடம்மாற்றியுள்ளனர்.
ஜனாதிபதி சிங்கள மொழிக்கும் பெளத்தத்திற்கும் முன்னுரிமை என தேர்தலில் வெற்றி பெற்ற காலத்தில் இருந்தே தெரிவித்து வரும் நிலையில் அதன் ஒரு வடிவமாகவே இந்த செயற்பாட்டையும் நோக்கவேண்டியுள்ளது.
வடக்கு கிழக்கில் தமிழ் மொழி முன்னுரிமை என அரசியலமைப்பு ரீதியாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் வடக்கிற்கு வந்த நீதி அமைச்சரும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை என தெரிவித்திருந்த நிலையிலும் இவ்வாறான ஒரு சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் அரங்கேறியிருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த நிகழ்வில் கலந்துகொள்ளாது புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.