தொழிலாளர்களின் நலன் கருதி கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் என கோரி பெருந்தோட்ட தொழிலாளர்கள் இன்று (09) அட்டனில் போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
தொழிலாளர்களின் உரிமைசார் விடயங்கள் தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கமும், இலங்கை தொழிற்சங்கங்களின் சம்மேளனமும், தொழிலாளர்களுடன் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அட்டனில் அமைந்துள்ள தொழில் திணைக்களத்திற்கு முன்பாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 50ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தின் போது, தொழில் திணைக்களமே தோட்ட தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மீறபடுவதை உடனடியாக தடுத்து நிறுத்து, தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு நிபந்தனைகள் இன்றி வழங்கப்பட வேண்டும், தொழில் அமைச்சரே கூட்டு ஒப்பந்தம் உடனடியாக மீண்டும் கைச்சாத்திடப்பட வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதன் பிறகு தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் தொழில் ஆணையாளரிடம் கையளித்தமை குறிப்பிடதக்கது.
–க.கிஷாந்தன்-