செட்டிகுளம் பகுதியில் தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் இன்று அதிகாலை (07) குறித்த குடும்பஸ்தர் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செட்டிகுளம், கங்கன்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று (06) மாலை 4 மணியளவில் சண்முகபுரம் நோக்கிச் சென்ற இளம் குடும்பஸ்தர் இரவாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அதிகாலை 1 மணியளவில் கங்கன்குளம் சந்திப் பகுதியில் தலையில் வெட்டுக்காயங்களுடன் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் குறித்த குடும்பஸ்தர் வீதியில் கிடப்பதாக அவரது மனைவிக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் அங்கு சென்றுள்ளார்.
இதன்போது அப்பகுதி மக்களின் துணையுடன் நோயாளர் காவு வண்டி மூலம் குறித்த இளம் குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுப்பிரமணியம் கண்ணன் (33) என்ற இளம் குடும்பஸ்தரே தலையில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். வவுனியா வைத்தியசாலையில் குறித்த நபர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.