சாவகச்சேரியில் ஊடகவியலாளர் மீது வானில் வந்தோர் தாக்குதல் நடத்தியதில், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்மித்து இன்று (31) திங்கட்கிழமை மதியம் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் மீது வானில் வந்தோர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பித்துச் சென்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரியைச் சேர்ந்த தவராசா சுபேசன் (27) என்ற ஊடகவியலாளரே இவ்வாறு முகம் மற்றும் கைகளில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட பின்னர் கச்சாய் வீதி ஊடாக சென்ற ஊடகவியலாளரை மோதிக் காயப்படுத்தும் வகையில் வான் ஒன்று ஊடகவியலாளர் பயணித்த மோட்டார் சைக்கிளின் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் வானில் இருந்தவர்களில் ஒருவர் பொல்லுகள் மற்றும் கல் ஆகியவற்றால் ஊடகவியலாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு வானில் ஏறி தப்பித்துச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.