முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சுகாதார உதவியாளராக பணியாற்றும் பெண் ஊழியர் மீது, இனம்தெரியாதவர்கள் அசிட் வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று அதிகாலை பணி முடிந்து வீடு திரும்பும் போது, ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியில் காட்டுப்பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
நேற்று முன்தினம் இரவுக்கடமைகளை முடித்து விட்டு, நேற்று அதிகாலை வைத்தியசாலையிலிருந்து புறப்பட்டு, துணுக்காயிலுள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
ஒட்டுசுட்டான் நகரத்தை கடந்து மாங்குளம் நோக்கி செல்லும் போது, காட்டுப்பகுதியில் நின்ற இருவர், பெண் ஊழியர் மீது அசிட்டை வீசிள்ளனர்.
இதனால் கண் பாதிப்படைந்த அவர், அருகிலுள்ள பொதுக்கிணற்றில் கண்ணை கழுவினார். எனினும், கண் பார்வை சீரடையவில்லை. சற்று தொலைவிலுள்ள ஒரு வீட்டில் தஞ்சமடைந்தவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அறிவித்து, நோயாளர் காவு வண்டி மூலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சென்றார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.