சேவல் சண்டைக்கு விடப்படும் இரண்டு சேவல்களும் உயிருடன் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு, சேவல் சண்டைக்கு அனுமதியளித்துள்ளது
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் சேர்ந்த தங்கமுத்து என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார் .
அந்த மனுவில் கூறப்பட்டதாவது,
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் உள்ள தாமஸ் நகரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வருடம் தோறும் சேவல் சண்டை நடத்தி வருகிறோம். இந்த வருடமும், அரசு பிறப்பித்துள்ள கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அனைத்து விதமான முன்னேற்பாடுகளுடன் சேவல் சண்டை நடத்த திட்டமிட்டுள்ளோம். .
ஜனவரி 16 ஆம் திகதி சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தோம். நீதிமன்ற உத்தரவை இருந்தால் மட்டுமே சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
எனவே, தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாமஸ் நகர் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 16ஆம் திகதி சேவல் சண்டை நடத்துவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார் .
இந்த மனு நீதிபதி ஜி .ஆர் .சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் ஜனவரி 17ஆம் திகதி சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, சேவல் சண்டையின் போது சேவலின் கால்களில் பிளேடு கத்தி உள்ளிட்டவை கட்டக்கூடாது, உயிர் இழக்கும் வகையில் சண்டை நடத்த கூடாது, சண்டைக்கு விடப்படும் இரண்டு சேவல்களும் உயிருடன் கண்டிப்பாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு ஜனவரி 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் ஜனவரி 17ஆம் திகதி சேவல் சண்டை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டார்.