நடு வழியில் மாட்டிக் கொண்ட மோடி: பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பஞ்சாப் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

Date:

பஞ்சாப் மாநிலத்துக்கு பிரதமர் மோடி பயணம் செய்தபோது பாதுகாப்பு விதிமீறல் ஏற்பட்டது தொடர்பாக மாநில அரசிடமிருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இந்த குறைபாட்டுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை தீர்மானித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை பதிண்டாவில் விமானத்திலிருந்து இறங்கி ஹெலிகாப்டர் மூலம் ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்லவேண்டியிருந்தது. மழை மற்றும் மிகவும் மங்கலான நிலை காரணமாக வானிலை சீரடைவதற்காக பிரதமர் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தார்.

வானிலை சீரடையாதபோது சாலை வழியாக தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு அவர் செல்வார் என முடிவு செய்யப்பட்டது. இதற்கு 2 மணி நேரத்திற்கும் கூடுதலாக தேவைப்படும் பஞ்சாப் காவல் துறையின் தலைமை இயக்குனரிடமிருந்து தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்பட்டபின் அவர் சாலை வழியாகப் பயணத்தைத் தொடர்ந்தார்.

ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கிலோ மீட்டருக்கு முன்னால் பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்திருப்பது கண்டறியப்பட்டது.

மேம்பாலத்தில் 15-20 நிமிடங்கள் பிரதமர் காக்க வைக்கப்பட்டிருந்தார். பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய குறைபாடாக இது அமைந்தது.

பிரதமரின் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளின்படி போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் அவசர காலத்திற்கான திட்டம் தயார் நிலையில் இருப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை அவர்கள் செய்திருக்க வேண்டும்.

மேலும் அவசர கால திட்டத்தை கணக்கில் கொண்டு பஞ்சாப் அரசு சாலை வழியாக செல்லும்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது.

இந்தப் பாதுகாப்பு குறைப்பாட்டுக்கு பின் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பவும் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த கடுமையான பாதுகாப்பு விதிமீறலை கவனத்தில் கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசிடமிருந்து விரிவான அறிக்கையை கோரியுள்ளது. இந்த குறைபாட்டுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை தீர்மானித்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பாஜக தலைவர் ஜேபி நட்டா கூறுகையில், பஞ்சாப் முதல்வர் சரஞ்சித் சிங் சன்னிக்கு தொடர்ந்து தகவல்கள் அனுப்பப்பட்டும், டிவீட்டுகள் போட்டும் அவர் கண்டு கொள்ளவில்லை. போன் அழைப்புகளையும் அவர் எடுக்கவில்லை. வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க வந்த பிரதமர் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது மிகவும் மோசமானது. இப்படி ஒரு சம்பவம் சமீப காலத்தில் நடந்ததே இல்லை என்றார்.

ஆனால் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா கூறுகையில், பாஜக தலைவர் நிதானமிழந்து பேசுகிறார். பிரதமரின் பாதுகாப்புக்கு அவருடன் இருக்கும் எஸ்பிஜிதான் பொறுப்பு. அவர்கள் என்ன செய்தார்கள். அவர்கள் பணி செய்ய வேண்டியதுதானே. பிரதமரின் பாதுகாப்புக்கு 10,000 போலீஸார் போடப்பட்டிருந்தனர். அனைத்து ஏற்பாடுகளையும் எஸ்பிஜியிடம் கேட்டுத்தான் மாநில அரசும் காவல்துறையும் செய்துல்ளன. பாஜகவினர் வந்த பஸ்கள் செல்வதற்கு தனி ரூட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. பிரதமர் கார் மூலமாக ஹூசைனிவாலாவுக்கு செல்ல கடைசி நிமிடத்தில் முடிவெடுத்துள்ளார். இது பிரதமரின் வருகை நிகழ்ச்சி நிரலில் இடம் பெறவில்லை.

உண்மையில் பிரதமர் கலந்து கொள்ளவிருந்த கூட்டத்திற்கு ஆட்கள் கூடவில்லை. காலி சேர்களே கூட்ட இடத்தை ஆக்கிரமித்திருந்தன. இதனால்தான் பிரதமர் திரும்பிச் சென்றார் என்று கூறியுள்ளார். பிரதமரின் கார் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் பஞ்சாபில் அனலைக் கிளப்பியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

இன்றைய வானிலை

இன்றைய (30) வானிலை முன்னறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு, சபரகமுவ...

FIFA WC 2026 | ஜப்பானை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்

திங்களன்று (ஜூன் 29) ஹூஸ்டனில் நடந்த விறுவிறுப்பான போட்டியில் ஜப்பானை 2-1...

FIFA WC 2026 | பராகுவே அதிர்ச்சி வைத்தியம்: ஜேர்மனியின் உலகக்கிண்ண கனவு முடிந்தது!

2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் ஜெர்மனியின் பயணம் ஒரு திகைப்பூட்டும் வகையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்