மக்களுக்காக பேசிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை பதவியில் இருந்து விலக்கியது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி வே.இராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் புஸ்ஸல்லாவ பிரதேச தோட்ட தலைவர்களுக்கான சந்திப்பு நேற்று (04) புஸ்ஸல்லாவ மலையக மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வே.இராதாகிருஸ்ணன்,
முன்னால் அமைச்சர் சுசில் பிரேமசந்திர அவர்கள் இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளில் சிரேஷ்ட அரசியல்வாதியும் சட்டதரணியுமாவார். இலங்கையில் பல அமைச்சு பதவிகளையும் சில அரசியல் கூட்டணி கட்சிகளின் செயலாளராகவும் இருந்துள்ளார். நல்ல அரசியல் அனுவபம் உள்ளவர். நாட்டுக்காக பல உன்னத சேவைகளை செய்யதவர். இவரை பதவியில் இருந்து விலக்கியது ஒரு கோழைத்தனமான விடயமாகும். இந்த செயற்பாடு தற்போதை அரசாங்கத்தின் வங்குரோத்து அரசியலை சுட்டிக்காட்டுகின்றது.
இந்த அரசாங்கத்தில் இருக்ககும் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்பன்பில, நிமல் லன்சா போன்றவர்களும் அண்மைக்காலமாக அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர். இவர்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. மக்களுக்காக மக்கள் பிரதிநிதி என்ற வகையில் உண்மையை பேசிய முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமசந்திர அவர்களை பதவியில் இருந்து விலக்கியுள்ளார்கள்.
இவ்வாறன சந்தர்பத்தில் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும். எதிர்காலத்தில் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப செயற்பட வேண்டும். இதற்கு நீங்களும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்று அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.