முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் சட்ட விரோத கருக்கலைப்புக்கு முயற்சித்த போது கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகோரி முல்லைத்தீவு மூங்கிலாறு கிராம மக்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மூங்கிலாறு கிராமத்தில் இன்றையதினம் (20) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆம் திகதி காணாமல் போயுள்ளார் என புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யபட்டமைக்கு அமைவாக நான்கு நாட்கள் தேடுதலின் பின்னர் கைவிட பட்ட வளவு ஒன்றில் சிறுமி அலங்கோலமான நிலையில் சடலமாக மீட்க்கப்பட்டிருந்தார்.
சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டு சட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நேற்றையதினம் மருத்துவ அறிக்கை வெளியாகியிருந்தது. பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இறப்பு சம்பவித்துள்ளதோடு இரண்டு மாதம் சிறுமி கருவுற்றும் இருந்துள்ளார். இதன்மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கருத்தரித்த பின்னர் சட்ட விரோதமான முறையில் கருக்கலைப்புக்கு முயற்சித்து அதிக இரத்த போக்கு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரியும் சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த கோரியும் கொலைசெய்ய பட்ட சிறுமியின் கிராமமான மூங்கிலாறு கிராமத்தின் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
மூங்கிலாறு சந்தியிலிருந்து பேரணியாக உடையார்கட்டு மகா வித்தியாலயம் வரை பேரணியாக சென்று கறுப்பு கொடிகள் மற்றும் கறுப்பு பட்டிகளை அணிந்து கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
-கே .குமணன் –