காணியதிகாரம் வேண்டும். இதனைத்தான் நாங்கள் அரசியல் உரிமை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம். காணியதிகாரம் எங்களிடமிருந்தால் மயிலத்தமடு மாதவனையில் குடியேறியுள்ளவர்களை நாங்களே அதிகாரிகளிடம் கூறி வெளியேற்றியிருப்போம். அது நடக்காது போகியிருந்தால் எங்களிடமிருக்கும் பொலிஸ் அதிகாரங்களை கொண்டு செயற்படுத்தியிருப்போம். இன்று நாங்கள் எதையும் செய்ய முடியாது உள்ளோம். எங்களிடம் எந்த அதிகாரமுமில்லை. இப்படி பயணித்தால் வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். வடக்கு கிழக்கு என்று நாங்கள் பார்க்க முடியாது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்த பிரதேசங்கள். அது எங்களின் நிலம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
இன்று (19) பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
எங்கள் கைகளில் அதிகாரம் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்பதற்காக அதிகாரம் வேண்டாம் என்று எங்களினால் கூற முடியாது. அதிகாரம் எங்களுக்கு தேவையாக இருக்கிறது. மயிலத்தமடு பிரச்சினைக்கு நானும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாவும் இணைந்து வழக்கு தாக்கல் செய்துள்ளோம். எங்களின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகி வழக்கு பேசி வருகிறார். அந்த வழக்கை கொண்டு இவர்களை வெளியேற்றுவது மட்டுமல்ல நோக்கம். அந்த இடத்தை மேச்சல்தரையாக்க வேண்டும்.
தமிழர்களின் மேச்சல்தரையான மயிலத்தமடு மாதவனை, கெவிலியாமடு திபுலான, வட்டமடு போன்ற அனைத்தையும் பிரித்து ஏனைய சமூகங்களுக்கு கொடுக்க முனைப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதனை எங்கள் மக்கள் உணரவேண்டும். இவற்றெல்லாம் மாற்றியமைக்க அரசியல் அதிகாரம் எங்களின் கைக்கு வரவேண்டும். காணியதிகாரம், பொலிஸ் அதிகாரம் எங்களுக்கு தேவை. பொலிஸ் அதிகாரம் எங்களிடம் இருந்தால் நாங்கள் விடயங்களை கையாளுவோம். இப்போது எங்களின் பிரச்சினைகளுக்கு கொழும்பில் இருந்துதான் அறிவித்தல்கள் வருகிறது.
வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். வடக்கு கிழக்கு என்று நாங்கள் பார்க்க முடியாது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்த பிரதேசங்கள். அது எங்களின் நிலம் அதனை பாதுகாக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு சில வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது என்றார்.