தலைமன்னாரில் இடம் பெற்ற புகையிரத விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில் ஏனையவர்கள் படிப்படியாக சிகிச்சை பெற்று வீடு திரும்புவதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று வியாழக்கிழமை (18) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் மாவட்டத்தில் மேலும் 4 கொரோனா தொற்றாளர்கள் மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் கடற்படை வீரர்.இவர் கேகாலை மாவட்டத்தில் இருந்து விடுமுறை முடிவடைந்த நிலையில் கடமைக்கு திரும்பி இருந்தார். ஏனைய இருவர் பேசாலை மற்றும் ஆக்காட்டி வெளி பகுதிகளில் ஏற்கனவே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் உறவினர்களாக காணப்படுகின்றனர்.
மேலும் ஒருவர் சின்ன வலயன் கட்டு பகுதியில் புதிதாக ஆசிரிய பணியை மேற்கொள்ள இணைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நான்கு தொற்றாளர்களும் இன்றைய தினம் வியாழக்கிழமை(18) சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இது வரை 323 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடம் மாத்திரம் 306 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இது வரை 11 ஆயிரத்து 796 பீ.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.என தெரிவித்தார்.
மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் தலைமன்னாரில் புகையிரதம் பேரூந்து மோதி விபத்திற்கு உள்ளாகியதில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் தொடர்ந்தும் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஏனைவர்கள் படிப்படியாக சிகிச்சையை முடித்து வீடு திரும்புகின்றனர்.
இவர்கள் அனைவரும் விபத்தில் சிக்கிய போது உடனடியாக தலைமன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அங்கிருந்து சுமார் 11 அம்புலான்ஸ் வண்டி மூலம் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இவர்களுக்கு தேவையான கருதியை வழங்க அதிக தொண்டர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வருகை தந்து இரத்ததானம் செய்தனர்.என அவர் மேலும் தெரிவித்தார்.