வவுனியா, பறநாட்டாங்கல் கிராம அலுவலர் பிரிவில் தனிநபர் ஒருவரால் 500 ஏக்கர் அரச காணி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அப் பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஏ9 வீதி பறநாட்டாங்கல் சந்தியில் குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (18) இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், பறநாட்டாங்கல் கிராமத்தில் பல குடும்பங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாய நிலங்கள் அற்றவர்களாகவும், தொழில் வாய்ப்பு அற்றவர்களாகவும் வாழ்ந்து வரும் நிலையில் எமது கிராமத்தில் தனிநபர் ஒருவர் 500 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன், அதனை விற்பனை செய்தும் வருகின்றார். எனவே அதனை தடுத்து நிறுத்தி அக் கிராமத்தில் வாழ்வாதாரத்திற்காக காணிகளற்ற மக்களுக்கு அதனை வழங்க அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
போரராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘ 500 ஏக்கர் காணி அபகரிப்பு நியாயமா, அரசே எங்கள் தாய் நிலங்களை மீட்டுத் தா, நிலம் எங்கள் உரிமை, அரசே கொள்ளையர்கள் பக்கம் நிற்காதே, அரசின் நீதி நியாயமானதா? ஏழை விவசாயிகளை வாழவிடு, பணம் படைத்த ஒருவனுக்கு 500 ஏக்கர் நிலம் சொந்தம் – ஏழை மக்களுக்கு எது சொந்தம்’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் ஆகியோர் சென்று, மக்களது கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், குறித்த காணிகளை மீளப் பெற்று அதனை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அத்துடன், வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் குறித்த 500 ஏக்கர் காணியினை அக் கிராம மக்களுடன் இணைந்து பார்வையிட்டதுடன், ஆவணங்கள் அற்ற அரச காணிகளை உடனடியாக மீளப்பெற்று அதனை காணிகளற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறும் பிரதேச செயலாளருக்கு வலியுறுத்தி இருந்துடன், குறித்த தனிநபரால் மேற்கொள்ளப்பட்ட காணி ஆக்கிரமிப்பு தொடர்பில் பொலிசாருக்கும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.