தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தில் (ரெலோ) மீண்டும் ஒரு பிளவு ஏற்படும் ஏதுநிலை தோன்றியுள்ளது. தற்போதுள்ள நிலைமை நீடித்தால், நாளை மறுதினம் (20) முல்லைத்தீவில் இடம்பெறும் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பிளவு பகிரங்கமாகுமென தமிழ்பக்கம் நம்பகரமாக அறிகிறது.
ரெலோவின் அண்மைக்காலமாக குழு செயற்பாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கட்சி தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் ஒரு குழுவுடன் சேர்ந்து செயற்படுகிறார் என்ற விமர்சனங்கள் கட்சிக்குள்ளேயே அதிகரித்துள்ளது.
கட்சிக்குள் அண்மையில் இணைந்து கொண்ட சுரேன் குருசாமி யாழ் மாவட்ட வேட்பாளராகியது, யாழ்ப்பாணத்திலுள்ள மூத்த உறுப்பினர்களிற்கு பிடிக்கவில்லை. இதையடுத்து, அந்த மூத்த உறுப்பினர்கள் அனைவரையும் புறமொதுக்கி விட்டு, தனக்கு தோதான சிலருடன் யாழ் மாவட்ட செயற்பாடுகளை அவர் முன்னெடுக்கிறார் என்ற விமர்சனம் உள்ளது.
யாழ் மாவட்ட அலுவலகம் என கூறப்படும் கட்டிடத்தின் திறப்பும் சுரேன் வசமிருப்பதாகவும், அவர் கொழும்பு சென்றால் திறப்புடன் சென்று விடுவதாகவும், அவர் வரும் போது மட்டும் அலுவலகத்தை திறந்து, தனக்கு நெருக்கமான சிலருடன் மாவட்ட குழு கூட்டத்தை நடத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கட்சியின் தேசிய அமைப்பாளர், பேச்சாளர் என இரட்டை பொறுப்புக்கள் அவருக்கு வழங்கப்பட்டன. இப்படி, தனக்கு நெருக்கமானவர்களிற்கு இரண்டு, மூன்று பொறுப்புக்களை செல்வம் அடைக்கலநாதன் வழங்கியுள்ளார்.
இது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரை அதிருப்திக்குள்ளாக்கியிருந்தது.
புதிய வரவுகள் பல பொறுப்புக்களை வகிப்பதுடன், மூத்த உறுப்பினர்களை தவிர்த்து கட்சி செயற்பாட்டை முன்னெடுப்பதால் அதிருப்தியாளர்கள், கட்சியை விட்டு விலக தீர்மானித்துள்ளனர்.
கட்சியில் வெற்றிடமாக உள்ள பொறுப்புக்களிற்கு புதியவர்களை நியமிக்க, நாளை மறுதினம் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் ரெலோவின் பொதுக்குழு கூடுகிறது. இதன்போது, கட்சியின் குழு செயற்பாட்டை சுட்டிக்காட்ட தீர்மானித்துள்ள அதிருப்தியாளர்கள், கட்சி தலைமை தனது வழக்கமான செயற்பாட்டையே தொடர்ந்தால், கட்சியிலிருந்து விலகுவதாக அந்த கூட்டத்திலேயே அறிவித்து விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளனர்.
ரெலோவின் மூத்த உறுப்பினர்கள் பலருடன், இந்தியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி உள்ளிட்ட 5 நாட்டு கிளைகளும், ரெலோவிலிருந்து விலகவுள்ளனர்.
அவர்கள் ரெலோவிலிருந்து விலகினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பிலேயே தொடர்ந்து செயற்படுவார்கள்.
இதற்கு வசதியாக, தமிழ் தேசிய கட்சியை மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணையும்படி அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் தரப்பு அந்த முடிவை ஏற்றுக்கொண்டால், ரெலோவிலிருந்து பிரிபவர்கள் தமிழ் தேசிய கட்சியில் இணைந்து, தமிழ் தேசிய கூட்டமைப்பில் நீடிக்கலாமென திட்டமிட்டுள்ளனர்.
சுமார் 150 இற்கும் குறையாத ரெலோ அங்கத்தவர்கள் வெளியேறுவார்கள் என அதிருப்தியாளர் தரப்பு பிரமுகராக கிழக்கை சேர்ந்த ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் மீண்டும் இணைய தமிழ் தேசிய கட்சி மறுத்தால், இலங்கை தமிழ் அரசு கட்சியுடன் இணைந்து செயற்பட அதிருப்தியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
தாம் தமிழரசு கட்சியில் இணைவதை ரெலோவினால் தடுக்க முடியாது, அதை தட்டிக் கேட்கவும் ரெலோவிற்கு திராணியிருக்காது என அதிருப்தியாளர்கள் உறுதியாக நம்புகிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் விவகாரத்தில் ரெலோ தலைகீழாக நின்றும், அதை பெற முடியாமல் போனதை அதற்கு உதாரணமாக சுட்டிக்காட்டுகிறார்கள்.