அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பேரூந்து தலைமன்னார் பியர் பகுதியில் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன், பாடசாலை மாணவர்கள் பயணிகள் என 25 பேர் காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை(16) மதியம் மன்னாரில் இருந்து பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, தலைமன்னார் பியர் பகுதியில் வைத்து மதியம் 2 மணியளவில் அனுராதபுரத்தில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி விபத்திற்கு உள்ளாகியது.
காயமடைந்தவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டனர்.
விபத்தில் 9 வயதான பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பாடசாலை மாணவர்கள் பயணிகள் என 24 பேர் வரை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.
தற்போது காயமடைந்தவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து சம்பவத்தை அறிந்த மக்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை சூழ்ந்து கொண்டனர்.
இதே வேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக குருதி வழங்க விரும்புபவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.