‘ஜர்னி’ என்ற படத்தின் மூலம் இந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார் பிரபுதேவா.
ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இது தவிர பிரபுதேவா நடிப்பில் ‘தேள்’, ‘பஹீரா’, ‘யங் மங் சங்’ உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுத் தயாராக உள்ளன. இதில் ‘தேள்’ படம் வரும் டிசம்பர் 10 அன்று வெளியாகிறது.
இந்நிலையில் இந்தியில் ஆஷிஷ் குமார் துபே இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபுதேவா. இப்படத்துக்கு ‘ஜர்னி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை அஞ்ஸும் ரவி மற்றும் ஆஷிஷ் குமார் துபே இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.
தற்போது இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மட்டுமே தொடங்கியுள்ளதாகவும் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஆக்ரா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நடைபெற உள்ளது.
இந்தியில் ‘வாண்டட்’, ‘ஆக்சன் ஜாக்சன்’, ‘ரவுடி ரத்தோர்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள பிரபுதேவா தற்போது முதல் முறையாக இந்தியில் நாயகனாக அறிமுகமாகிறார்.