‘மாநாடு’ படம் குறித்தும், சிம்புவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்தப் படம் நவம்பர் 25ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ‘மாநாடு’ படம் குறித்தும் சிம்புவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு வெங்கட் பிரபு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
”எனக்கு சிம்புவுடன் மிகப்பெரிய பிணைப்பு இருக்கிறது. சிலர் சொல்வது போல அவர் மோசமானவர் அல்ல. அவர் ஒரு திறமையான நடிகர். படப்பிடிப்பு தொடங்கியதும் அவர் எனக்கு அனைத்து விஷயங்களையும் எளிமையாக்கி விடுவார்.
அவருடைய உடல் மாற்றத்தைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். எடையைக் குறைக்க வெறும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார். ஒரு நண்பராக எனக்கு சில ரகசியங்கள் தெரியும். ஆனால், அவை செய்திகளில் வெளியாகும் வரைதான் ரகசியங்களாக இருக்கும். எனவே என்னால் இதற்கு மேல் எதையும் சொல்ல முடியாது.
படம் தாமதமானதால் வெற்றிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு வித்தியாசமான படமாக ‘மாநாடு’ எப்போதும் இருக்கும்”.
இவ்வாறு வெங்கட் பிரபு கூறியுள்ளார்.