அமெரிக்காவும் கொங்கோவும் இணைந்து ஒரு தொன்னுக்கும் அதிகமான சட்டவிரோத யானைத் தந்தங்கள், காண்டாமிருகக் கொம்பு, எறும்பு தின்னி செதில்கள் கடத்தலை முறியடித்துள்ளன.
கொங்கோவில் இருந்து சியாட்டிலுக்கு யானை தந்தம் மற்றும் வெள்ளை காண்டாமிருக கொம்புகளை கடத்தியதற்காக சதி, பணமோசடி, கடத்தல் குற்றச்சாட்டில் சியாட்டிலுக்கு அருகிலுள்ள வாஷிங்டனில் உள்ள எட்மண்ட்ஸில் கடந்த வாரம் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
கொங்கோவைச் சேர்ந்த இருவரும், கடந்த ஆண்டு விமானப் போக்குவரத்து மூலம் அமெரிக்காவிற்கு 49 பவுண்டுகள் யானை தந்தங்கள் அடங்கிய மூன்று பொட்டலங்களை கடத்துவதற்கு இடைத்தரகர் ஒருவருடன் இணைந்து பணியாற்றியதாகவும், மே மாதம் நான்காவது கப்பலில் ஐந்து பவுண்டுகள் காண்டாமிருக கொம்புகள் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒரு வாங்குபவர் தந்தத்திற்கு 14,500 டொலர் மற்றும் கொம்புக்கு 18,000 டொலர் செலுத்தினார்.
உலகின் சில பகுதிகளில் மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 55 பவுண்டுகள் எடையுள்ள எறும்புதின்னியின் செதில்களையும் அவர்கள் விற்றனர்.
அவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கொங்கோவின், கின்ஷாசாவில் சுமார் 3.5 மில்லியன் டொலர் மதிப்புள்ள 2,067 பவுண்டுகள் தந்தங்களையும் 75 பவுண்டுகள் எறும்புதின்னி செதில்களையும் கைப்பற்றியது
யானையின் மரபணு மூலமே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் தடயவியல் அறிவியல் மையத்தினால் (CEFS), யானைகள் குறித்த தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த தரவுத்தளமே, உலகில் கைப்பற்றப்பட்ட யானைத் தந்தங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய தரவுத்தளமாகும். அரை தொன்னுக்கும் மேற்பட்ட யானைத் தந்தங்களின் மூலம் அவை உருவாக்கப்பட்டன.
இதன்மூலம், ஆபிரிக்காவில் 180 மைல் தூரத்துக்குள் உள்ள யானையின் பூர்வீகத்தைக் கண்டுபிடிக்க மரபணு உதவுகிறது.
அவ்வாறு தான் கொங்கோவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஒரே யானையின் இரண்டு தந்தங்களும் வெவ்வேறு சமயங்களில் ஏற்றுமதி செய்யப்பட்டதும், அந்த குழு சுலபமாக சிக்க காரணங்களில் ஒன்றானது.
அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட தந்தங்கள் சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு, கருப்பு வண்ணம் பூசப்பட்டு, பின்னர் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக, கருங்காலி மரத்துண்டுகளின் போர்வையில் கப்பலில் கலக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விற்பனை பொருட்களை பேரம் பேசுவதற்காக சந்தேக நபர்கள் நவம்பர் 3 ஆம் திகதி அமெரிக்கா வந்தபோது கைது செய்யப்பட்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் கடத்தல் மற்றும் பணமோசடி குற்றங்களுக்காக அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் சதி மற்றும் சட்ட மீறல்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.