இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்ளேயின் வடக்கு, கிழக்கு விஜயம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் கடுமையான அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நீண்டகாலமாக இருக்கும் குறைபாடு- இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் மாத்திரமே முடிவுகளை எடுத்து, தனித்தவில் வாசித்தமை. கூட்டமைப்பின் பின்னடைவுகள், பிளவுகளிற்கும் இதுதான் மூல காரணமாக அமைந்தது.
வெளிநாட்டு தூதர்கள்- குறிப்பாக மேற்குநாட்டு தூதர்களை இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் மட்டுமே சந்திப்பார்கள். அந்த நாட்டு தூதர்களிற்கு கூட்டமைப்பு எப்படியானது என்பது தெரியுமோ என்னவோ, அந்தளவிலேயே தமது இராஜதந்திர நகர்வுகளை செய்து கொண்டிருந்தனர்.
ஆனால், இந்தியா அப்படியல்ல. இந்திய தூதர் அல்லது இந்திய ஆளுந்தரப்பு பிரமுகர்களின் கூட்டமைப்புடனான சந்திப்பென்பது, உண்மையான கூட்டமைப்பின் சந்திப்பாக இருக்கும். பலமுறை, பங்காளி கட்சிகளின் தலைவர்களை வெட்டிவிட்டு செல்ல சம்பந்தன் விரும்பினாலும், இந்திய தூதரகத்தில் இருந்து கண்டிப்பான அறிவுறுத்தல் வரும். இந்திய பிரதமருடனான சந்திப்புக்களிலும் அதில் கவனமாக இருப்பார்கள். இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சந்திப்புக்கு வாருங்கள் என பெயர் குறிப்பிட்டு அழைப்பார்கள்.
ஆனால் இம்முறை இந்திய தூதர் கோபால் பாக்ளேயின் வடக்கு கிழக்கு விஜயம் என்பது கூட்டமைப்பிற்குள் சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சியை மையப்படுத்தியே இந்த சந்திப்புக்கள் நடந்தது. பங்காளிக்கட்சிகள் இதில் புறமொதுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பின் இளம் தலைவர்கள் என அழைத்து செல்லப்பட்டவர்கள் உண்மையில் கூட்டமைப்பின் இளம் தலைவர்கள் அல்ல. அதில், பா.கஜதீபன் தவிர்ந்த மற்றைய அனைவரும் எம்.ஏ.சுமந்திரனின் அணியினர். யாழ்ப்பாணத்திலேயே ஏனைய தவிசாளர்கள் தவிர்க்கப்பட்டு, சுமந்திரன் அணியினர் மட்டுமே அழைக்கப்பட்டனர். கூட்டத்திற்கு சென்ற ரெலோ தவிசாளர் நிரோஷ் வெளியே அனுப்பப்பட்டார்.
கிழக்கில் கனடாவிலிருந்து காசுடன் வந்த குகதாசனும், சாணக்கியனும் மட்டுமே சந்தித்தார்கள். மட்டக்களப்பின் இன்னொரு எம்.பியான கோவிந்தம் கருணாகரனிற்கு தகவலே சொல்லப்படவில்லை.
வடக்கில் எந்த அடிப்படையில் இளம் தலைவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என, இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை தொடர்பு கொண்டு தமிழ்பக்கம் வினவியது.
அந்த தெரிவை தான் செய்யவில்லையென்றும், தெரிவில் தவறுகள் உள்ளதான அதிருப்திகள் உள்ளதை அறிந்துள்ளதாகவும் தெரிவித்தார். தமது கட்சிக்குள்ளிருந்தே சந்திப்பை ஏற்பாடு செய்ததாகவும், ஆனால் இப்போது இவற்றை சர்ச்சையாக்க விரும்பாததால் அதிகம் பேசவில்லையென தெரிவித்தார்.
இந்த சந்திப்பிற்கான ஏற்பாட்டை எம்.ஏ.சுமந்திரனே மேற்கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அதனாலேயே இவர் தனது ஆதரவாளர்களை சந்திப்பில் கலந்து கொள்ள வைத்துள்ளார் என ஊகிக்க முடிகிறது.
வடக்கு சந்திப்பை போலவே, கிழக்கு சந்திப்பிலும் சுமந்திரனுடன் தொடர்புடையவர்களே சந்திப்பில் கலந்து கொண்டனர். தமிழ் அரசு கட்சிக்குள் பணத்தை வீசியெறிந்து காரியம் சாதிக்கும் கனடா அணியை சேர்ந்தவர் குகதாசன். கனடா அணி கண்மூடிததனமாக சுமந்திரனை ஆதரிக்கிறது. சுமந்திரன் அணியில் இருக்கிறார் சாணக்கியன்.
இந்திய தூதரின் இந்த புதிய நகர்வு, இந்தியாவின் கொள்கை மாற்றமா அல்லது வேறேதும் காரணமா என இந்திய தூதரகத்திலுள்ள தமிழ் அதிகாரியொருவரை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியது.
“இந்த விவகாரத்தை நாமும் அறிந்துள்ளோம். சில தரப்புக்களுடனும் பேசியுள்ளோம். இதை பற்றி அதிகம் பேசவிரும்பவில்லை. ஆனால் இனிவரும் நாட்களில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம்“ என சுருக்கமாக குறிப்பிட்டார்.
கூட்டமைப்பு தரப்பிலிருந்து தூதரின் சந்திப்புக்களை யாரும் பிழையாக வழிநடத்தியதாக கருதுகிறீர்களா என தமிழ்பக்கம் வினவியபோது, தூதரகம் இப்படியான கருத்துக்களை தெரிவிப்பதில்லை என்றார்.
எதுஎப்படியோ, இரா.சம்பந்தனின் செயற்பட முடியாத தன்மை காரணமாக, இந்த சந்திப்பு விவகாரத்தை கைாளும் பொறுப்பை எம்.ஏ.சுமந்திரனிடம் விட்டிருந்தார். ஒரு சாதாரண சந்திப்பு விவகாரத்தையே பொறுப்புடன், கூட்டமைப்பாக எம்.ஏ.சுமந்திரனினால் சிந்திக்க முடியாமையை புலப்படுத்துகிறது. இரா.சம்பந்தனின் பின்னராக, தமிழ் அரசியலில் ஏற்படப் போகும் பெரு வீழ்ச்சியையும் அது புலப்படுத்துகிறது.