வரலாற்று சிறப்புமிக்க கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200ம் வருட கொடியேற்று விழாவினை முன்னிட்டு ஞாபகார்த்த நாணயம் வெளியிடுமாறு பிரதம அமைச்சர் கெளரவ மஹிந்த ராஜபக்ஷ , நிதி அமைச்சர் கெளரவ பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரிடம் தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நானிலம் போற்றும் நாகூர் நாயகம் கருணைக்கடல் குத்புல் அக்தாப் ஹழ்றத் செய்யிதுனா மஹான் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அவர்களின் நினைவாக வருடா வருடம் நடைபெற்று வரும் புனித கொடியேற்று விழாவின் 200ம் வருட கொடியேற்று விழா எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்ப பகுதியில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் நடைபெற உள்ளது. எமது நாட்டின் பல பாகங்களில் உள்ள பல்லின மக்கள் வருகை தரும் இன நல்லுறவின் அடையாளமாக திகழும் இப் புனித தளமானது நாட்டின் பாரம்பரிய கலாசார சர்வதேச உறவுகளிலும் செல்வாக்கு செலுத்தியும் வருகின்றது. கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் நடைபெற்று வரும் புனித கொடியேற்று விழாவானது அரச வர்த்தமானப் பத்திரிகையில் அறிவிப்பு செய்யப்பபட்ட அரச அங்கீகாரம் பெற்ற கலாசார நிகழ்வாக முக்கிய பங்காற்றியும் வருகின்றமை குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
எதிர்வருகின்ற ஜனவரி மாதம் ஆரம்ப பகுதியில் நடைபெற இருக்கின்ற கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200ம் வருட புனித கொடியேற்று விழாவினை முன்னிட்டு ஞாபகார்த்த நாணயம் வெளியிடுமாறு வேண்டியே தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்றாஸ் மன்சூரினால் வரலாற்று ஆவன இணைப்புடன் கூடிய வேண்டுகோள் கடிதம் பிரதம அமைச்சரின் அலுவலகம், நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.