இனவெறிக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் முழங்காலிட்டு சபதம் ஏற்கக் கோரி தென்னாபிரிக்க அணியினருக்கு வாரியம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போட்டிக்கான ரொஸ் போடப்பட்டபின் விக்கெட் கீப்பர் டீ கொக் களமிறங்க மறுத்துவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குயின் டன் டீ கொக் தனிப்பட்ட காரணங்களால் களமிறங்கவில்லை என தென்னாபிரிக்க வாரியம் தெரிவித்தாலும், உண்மையில் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு சபதம் ஏற்க அவர் மறுத்துவிட்டதாகவே கூறப்படுகிறது.
போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் டீ கொக் தனது முடிவை அறிவித்ததால், வேறு வழியின்றி கடைசி நேரத்தில் விக்கெட் கீப்பராக கிளாசன் களமிறக்கப்பட்டார்.
கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்ற கருத்துக்கு ஆதரவாக விளையாட்டு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இனவெறிப் பிரச்சினையாலே கிரிக்கெட் வாழ்க்கையை இழந்த தென்னாபிரிக்காவும் இனவெறிக்கு எதிராகக் களமிறங்கியுள்ளது. இனிவரும் போட்டிகள் அனைத்திலும் தென்னாபிரிக்க வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கை வெளியான சில மணி நேரத்துக்குப் பின் தென்னாபிரிக்க கப்டன் பவுமா ரொஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார். வீரர்கள் அனைவரும் முழங்காலிட்டு சபதம் ஏற்க வேண்டிய நிலையில் விக்கெட் கீப்பர் டீ கொக் தனிப்பட்ட காரணங்களால் களமிறங்கவில்லை என தென்னாபிரிக்க அணி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து கிளாசன் களமிறக்கப்பட்டார்.
இதுகுறித்து தென்னாபிரிக்க கப்டன் பவுமாவிடம் நிருபர்கள் கேட்டபோது, அவர் பதில் அளிக்கையில், “டீ கொக் முதிர்ச்சியானவர், அவர் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவர் மனதில் வைத்திருக்கும் தீர்மானத்தையும் மதிக்கிறோம். ஆனால், அவர் களமிறங்காமல் இருப்பது எத்தனை நாட்களுக்குச் செல்லும் என எனக்குத் தெரியாது.
என்ன மாதிரியாக உருமாறும் எனவும் எனக்குத் தெரியாது. இதன் அர்த்தம் என்னவென்றால், டீ கொக் இன்றைய சூழலுக்கு முடிவு எடுத்துள்ளார். இன்று நடந்ததைப் பற்றி மட்டும்தான் என்னால் பேச முடியும். அனைத்து வீரர்களும் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக சபதம் ஏற்க உத்தரவிட்டது. அதன்படி செய்தோம். எங்களுக்குப் போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்புதான் வாரியத்திடம் இருந்து உத்தரவு வந்தது. இதைப் பற்றி முழுமையாக ஆலோசிக்கவோ, விவாதிக்கவோ போதுமான நேரம் இல்லை” எனத் தெரிவித்தார்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த டீ கொக் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக நிற்க மறுத்துவிட்டது குறித்து மே.இ.தீவுகள் கப்டன் பொலார்டிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பொலார்ட் கூறுகையில், “தென்னாபிரிக்க வீரர் ஒருவர் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக நிற்க மறுத்துவிட்டார். விளையாட மறுத்துவிட்டார் என்பது எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட முறையில், எந்த வீரரைப் பற்றியும் தெரியாது. ஏன் அவர் அப்படிச் செய்யவில்லை என்பதும் எனக்குத் தெரியாது. எனக்கு இது புதிய செய்தியாக இருக்கிறது.
மே.இ.தீவுகள் அணி இந்த விஷயத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறது. இனவெறிக்கு எதிராக நாங்கள் எங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிப்போம். தொடர்ந்து முழங்காலிட்டு சபதம் எடுப்பது தொடரும். இதற்கு மேல் ஏதும் தெரிவிக்க இயலாது. எனக்கு அணியில் அதிகமான வேலை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.