இந்தி மொழி குறித்து வாடிக்கையாளரிடம் பேசிய ஊழியரை சொமேட்டோ நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று (18) சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு உணவு முழுமையாகக் கிடைக்காமல் பாதிப் பொருட்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதனால், சொமேட்டோ நிறுவனத்தின் கஸ்டமர் கேர் ‘சாட் பாக்ஸில்’ புகார் அளித்துள்ளார். அதற்கு சொமேட்டோ நிறுவன ஊழியர் இந்தியில் பதிலளித்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாடிக்கையாளரிடம், சொமேட்டோ ஊழியர் “இந்தி நமது தேசிய மொழி. எனவே அனைவரும் அதனைச் சிறிதளவு தெரிந்துகொள்ள வேண்டும்” என பதில் அனுப்பியுள்ளார்.
இதன் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், ‘பாய்காட் சொமேட்டோ’ (Boycott zomato) என, சொமேட்டோவைப் புறக்கணிக்குமாறு ட்விட்டரில் பலரும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இச்சம்பவத்துக்கு சொமேட்டோ நிறுவனம் வருத்தம் தெரிவித்து, தமிழில் அளித்துள்ள விளக்கம்:
“வணக்கம் தமிழ்நாடு,
எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்க் கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரைப் பணி நீக்கம் செய்துள்ளோம். பணி நீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும், மக்களின் உணர்வுகளுக்கு எதிராகக் கருத்தைப் பகிரக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்.
இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்புத் தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள் முழுப் பயன்பாட்டுக்காகத் தமிழ்ச் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கெனவே மாநிலத்துக்கான தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளூர்மயமாக்கியுள்ளோம் (எ.கா. நாங்கள் மாநிலத்துக்கான உள்ளூர் பிராண்ட் அம்பாசிடராக அனிருத்தைத் தேர்வு செய்துள்ளோம்). மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்ட்டர் / சர்வீஸ் சென்ட்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.
உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அவை இரண்டையும் நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்”.
இவ்வாறு சொமேட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.