28.6 C
Jaffna
December 22, 2024
Pagetamil
குற்றம்

கிளிநொச்சியில் கலாபக் காதலனான பாடசாலை மாணவன்; ஒரு தலை காதலால் விபரீதம்: தட்டிக் கேட்டவரின் கதையை முடித்த கொடூரம்!

கொலை செய்யப்பட்ட அருளம்பலம் துஷ்யந்தன்

கிளிநொச்சியில் கலாபக் காதலனால் இளம் குடும்பஸ்தர் குத்திக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பற்றிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட்டக்கச்சி, கட்சன் வீதியில் வீடு புகுந்து நடத்தப்பட்ட கத்திக்குத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர், கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (11) உயிரிழந்துள்ளார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான அருளம்பலம் துஷ்யந்தன் (31) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் அவருடைய பிறந்த தினம். அன்றைய நாளிலேயே இந்த கொடூரம் நடந்தது.

அவரை கத்தியால் குத்திய 17 வயதான இளைஞன் நேற்று இரவு இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அந்த 17 வயதான இளைஞனின் ஒரு தலை காதலே கொலையையும் நடத்தி முடித்துள்ளது. வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்லாறு பகுதிகளின் சில பகுதிகளில் சட்டவிரோத கசிப்பு, கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் தலைவிரித்தாடுகிறது. இந்த இருண்ட உலகத்திற்குள் ஈர்க்கப்படும் இளைஞர்கள் பலர் சமூக விரோதிகளாக உருவெடுத்து வருவதை பல தரப்பினரும் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வருகின்றனர். எனினும், அந்த பகுதியில் சட்டவிரோத செயல்கள் இதுவரை ஒழிக்கப்படவில்லை.

கட்சன் வீதி பகுதியிலுள்ள மாற்று திறனாளியொருவர் முச்சக்கர வண்டி செலுத்தி வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவரது மகளை, அந்த பகுதியிலுள்ள மாணவன் ஒருவன் ஒருதலையாக காதலித்துள்ளான். அவன் வட்டக்கச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி பயின்றான்.மாற்றுத்திறனாளியான அந்த முச்சக்கரவண்டியின் சாரதியின் குடும்பத்தின் நலன்களை கவனிப்பதில் உயிரிழந்த துஷ்யந்தனும் ஆர்வம் காட்டி வந்தார்.

அந்த மாணவன் தொடர்பில் கிராமத்தில் தற்போது சில முறைப்பாடுகள்  செய்யப்படுகின்றன. மாணவி வீதியில் சென்றால் தொல்லை கொடுத்து வந்துள்ளான். அவனது தொல்லை பொறுக்க முடியாமல், மாணவியின் குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதையடுத்து, மாணவிக்கு தொல்லை கொடுத்த மைனர் குஞ்சை பொலிசார் எச்சரித்து விடுவித்தனர்.

நேற்று முன்தினம் அந்த மாணவி பரீட்சைக்கு தோற்றிவிட்டு தனது இளைய சகோதரனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, அந்த கலாபக் காதலன் தொல்லை கொடுத்துள்ளான். ஏற்கனவே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த ஆத்திரமோ என்னவோ, மாணவியின் சகோதரனையும் தாக்கியுள்ளான்.

இந்த தகவலையறிந்ததும், முச்சக்கர வண்டி சங்கத்திலுள்ள சிலர் சென்று, அந்த கலாபக் காதலனை பிடித்து, “திருந்தவே மாட்டீர்களாடா?“ என்ற பாணியில் பேசி, இரண்டு தட்டுதட்டியுள்ளனர். கலாபக் காதலனுடன் வந்த இன்னொருவனும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கலாபக்காதலன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளான். இதற்குள், உயிரிழந்த துஷ்யந்தன், கபாலக்காதலனின் வீட்டிற்கு சென்று பேசியதாக கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளியான ஒருவரின் குடும்பத்திற்கு உபத்திரவம் கொடுக்கக்கூடாது, அதற்கேற்ப பிள்ளைகளை ஒழுங்காக வளருங்கள் என பேசிவிட்டு சென்றதாக உயிரிழந்தவர் தரப்பு கூறுகிறது.

தாக்கப்பட்டதாக கூறி கலாபக்காதலன் செய்த முறைப்பாட்டையடுத்து, இரண்டு தரப்பையும் அழைத்த பொலிசார் விசாரணை செய்தனர். அங்கு சுமுகமாக பிரச்சனையை முடிக்க இரு தரப்பும் இணக்கம் தெரிவித்தது. இதையடுத்து மாணவர்களிற்கு அறிவுரை கூறி பொலிசார் அனுப்பி வைத்தனர். தாக்கப்பட்டதாக கூறப்பட்டதால், மாணவர்களை வைத்தியசாலைக்கு செல்லுமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், மாணவர்கள் வைத்தியசாலை செல்லவில்லை. இரண்டு மாணவர்கள், ஒரு மாணவனின் தாயார் என மூவர், துஷ்யந்தன் வீட்டுக்கு சென்றனர். அவருடன் பேசப்போவதாக வீட்டுக்குள் நுழைந்து சச்சரவில் ஈடுபட்டனர். இந்த சச்சரவு நடந்த கொண்டிருந்த போது, கலாபக்காதலன் மறைத்து வைத்திருந்த கத்தியை உருவி துஷ்யந்தனை குத்தினான். அந்த இடத்திலேயே இவர் இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

உடனடியாக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார். இன்று (12) காலை  மரணவிசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படுகிறது. கொலையாளியான ஒரு தலை காதலன் நேற்று இரவு இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தான். போதை, தென்னிந்திய திரை கலாச்சாரம், பெற்றோரின் பொறுப்பற்ற தனங்களினால் மாணவிகள் நிம்மதியாக உலாவ முடியாமல் இருப்பதும், அதை தட்டிக் கேட்பவர்கள் கொல்லப்படுவதும் நமது சமூகத்தின் பெரும் சீரழிவை எடுத்துக் காட்டுகிறது.

What’s your Reaction?
+1
3
+1
0
+1
3
+1
0
+1
1
+1
5
+1
17

இதையும் படியுங்கள்

வடமராட்சியில் 12 சைக்கிள் திருடிய எமகாதகன் கைது!

Pagetamil

குடு சலிந்து பிணையில் விடுதலை!

Pagetamil

வசமாக சிக்கிய ஜோடி!

Pagetamil

யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

Pagetamil

போதைப்பொருள் வியாபாரியின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

Pagetamil

Leave a Comment