தென்மும்பையில் உள்ள தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் கடந்த மாதம் 25-ந் தேதி வெடிப்பொருட்களுடன் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் கார் திருடப்பட்டதாக போலீசில் புகார் அளித்து இருந்த, அதன் உரிமையாளரான ஹிரேன் மன்சுக் கடந்த 5-ந் தேதி தானே கழிமுகப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில் திருப்பதையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் வெடிப்பொருட்களுடன் காரை நிறுத்தியதற்கு கடந்த 27-ந் தேதி டெலிகிராமில் ஜெய்ஷ்-உல்-இந்த் என்ற அமைப்பு பொறுப்பு ஏற்று இருந்தது. எனினும் மறுநாள் வெடிப்பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்டதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என அந்த அமைப்பு தெரிவித்தது. இந்தநிலையில் சம்பவத்திற்கு பொறுப்பேற்று தகவலை பரப்பிய டெலிகிராம் கணக்கு டெல்லியில் உள்ள திகாரில் உருவாக்கப்பட்டதை கண்டறிந்து இருப்பதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.