ஒரே வாரத்தில் 2வது முறையாக பேஸ்புக், இஸ்டகிராம் சேவைகளில் தடங்கல் ஏற்பட்ட நிலையில் பேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளது.
முன்னதாக கடந்த திங்கள் கிழமையன்று உலகம் முழுவதும் பேஸ்புக், வட்ஸ் அப், இன்ஸ்டகிராம் சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 6 மணி நேரம் வரை இந்தத் தலங்கள் முடங்கின. இதுவே பேஸ்புக்கின் மிகப்பெரிய அவுட்டேஜாகக் கருதப்படுகிறது.
வட்ஸ்அப் உள்ளிட்ட தங்கள்நிறுவன தளங்களில் தகவல் பரிவர்த்தனை தடை ஏற்பட்டதற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் வருத்தம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், தங்களது சேவையை எந்த அளவுக்கு மக்கள் நம்பியுள்ளனர் என்பதை, தான்நன்கு அறிவதாகவும், சேவை பாதிக்கப்பட்டதற்கு மிகவும் வருந்துவதாகவும், இதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அதில் குறிப்பிட்டார்.
உலகம் முழுவதும் சுமார் ஒரு கோடியே 6 இலட்சம் பேர் தகவல்பரிமாற முடியாமல் பாதிக்கப்பட்டதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் நிறுவன பங்குவிலைகள் சரிந்ததால் ஜூகர் பெர்க்கிற்கு 6 பில்லியன் டொலர் நஷ்டம் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்றிரவு (வெள்ளி இரவு) மீண்டும் இன்ஸ்டகிராமிலும், பேஸ்புக் மெசஞ்சரில் சிக்கல் ஏற்பட்டது.
இது குறித்து வாடிக்கையாளர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். சிலர் மீம்ஸ் வெளியிட்டு கிண்டல் செய்தனர்.
இந்நிலையில் இது குறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், “மனம் வருந்துகிறோம். கடந்த இரண்டு மணி நேரங்களாக எங்களின் சேவைகளைப் பயன்படுத்துவதில் சிலருக்கு சிக்கல் ஏற்பட்டதை அறிந்தோம். உடனடியாக செயல்பட்டு அந்தச் சிக்கல் இப்போது சரி செய்யப்பட்டுவிட்டது. எல்லாம் இயல்புக்கு திரும்பி விட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.