24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு 5 வருடங்களில் 500 மில்லியன் இழப்பு; பல பில்லியன் வளங்கள் அழிப்பு: இந்திய வெளியுறவுச் செயலாளரிடம் அமைச்சர் டக்ளஸ் ஆதங்கம்!

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் கடல் வளங்களையும் அழிக்கின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களின் இழுவை வலை (ரோலர்) தொழில் முறையை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்விடயத்தில் இந்தியாவின் தீர்க்கமான நடவடிக்கைகளை வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்கலாவுடனான சந்திப்பின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலும் இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர்,

“இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய சட்ட விரோத தொழில் முறை காரணமாக, 2015 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரையான காலப் பகுதியில் வடக்கு கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான சுமார் 500 மில்லியன் ரூபாய்க்கு அதிக பெறுமதியான தொழில் உபகரணங்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனைவிட பல பில்லியன் ரூபாய் பெறுமதியான கடல் வளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த சட்டவிரோதச் செயற்பாட்டினை நிறுத்த வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட போது, இந்த விவகாத்தினை தீர்ப்பதற்கான முன்வரைபு ஒன்றினை வழங்கியிருந்தேன்.

அந்த முன்வரைபில், இரண்டு நாடுகளும் ‘இணைந்த கடல் பாதுகாப்பு குழு’ ஒன்றினை உருவாக்கி பாக்கு நீரினை மற்றும் மன்னார் விரிகுடா பிரதேசத்தின் வளங்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளும் வரையில் சட்ட விரோத தொழில் முறையான இழுவை வலைத் தொழிலை நிறுத்துவது எனவும் சொல்லப்பட்டுள்ளது.

குறித்த வரைபினை இந்தியா வரவேற்றிருந்த போதிலும் கொறோனா உட்பட பல்வேறு காரணங்களினால் இதுவரை மேலதிக நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த விடயம் தொடர்பில் இந்தியாவின் கரிசனையை வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். எனவே விரைவான நடவடிக்கைகளை இரண்டு நாடுகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்று கடந்த 33 வருடங்களாக தொடர்ச்சியாக ஈ.பி.டி.பி. வலியுறுத்தி வருகின்றமை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

-அமைச்சின் ஊடகப்பிரிவு-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுர ஜன.13- 17 வரை சீன விஜயம்!

Pagetamil

கற்பனைக் குதிரைக்கு வயது 75

Pagetamil

திருகோணமலை கடற்கரையில் பெண்ணின் சடலம்

east tamil

சைபர் தாக்குதலுக்கு இலக்கானது இலங்கை பொலிஸ் யூடியூப் சேனல்

east tamil

உப்பிற்கு தட்டுப்பாடு இல்லை – டி. நந்தன திலக

east tamil

Leave a Comment