தொடக்கத்திலிருந்து இப்போதுவரை ஜோதிகாவை ஆச்சரியமாகப் பார்க்கிறேன் என்று சூர்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘உடன்பிறப்பே’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஜோதிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள 50வது படமாகும். இதற்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஒக்டோபர் 14ஆம் திகதி வெளியாகவுள்ளது. நேற்று (4) இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இணையம் வழியே நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜோதிகாவின் முதல் படத்தை இந்தியில் இயக்கியவரான ப்ரியதர்ஷன், முதல் தமிழ்ப் படத்தை இயக்கியவரான வஸந்த் ஆகியோர் ஜோதிகாவின் 50வது படத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஜோதிகா மற்றும் அவருடைய 50வது படம் குறித்து சூர்யா பேசிய ஓடியோ ஒலிபரப்பப்பட்டது.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“1998ஆம் ஆண்டின் கடைசியில் பிலிம் சிட்டியில் ஜோவை இயக்குநர் வஸந்த் சார் அறிமுகப்படுத்தி வைத்தார். ஒரு பாறைக்குப் பக்கத்தில் இருவரும் பார்த்துக் கொள்வது மாதிரி, பின்பு இருவரும் கையைப் பிடித்து நடந்துபோவது மாதிரி படமாக்கினார்கள். அப்போதிலிருந்து இப்போது வரை ஜோவை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
வேறு ஒரு ஊரிலிருந்து வந்த பெண், வேறு ஒரு மொழியை கற்றுக்கொண்டு அந்த ஊரையும் மக்களையும் தன்னுடையதாக ஆக்கிக் கொண்டுள்ளார். 50 படங்கள் நடித்துள்ளார். அவர் எடுத்த முடிவுகள் எல்லாமே ஏன் எடுக்கிறோம், எதற்காக எடுக்கிறோம் என்பதில் தெளிவாக இருப்பார். ஏன் சில படங்கள் செய்தேன், ஏன் சில படங்கள் செய்யவில்லை என்பதில் தெளிவாக இருப்பார். எப்போதுமே எது சரியோ அந்தப் பக்கம் இருப்பார். அவருடைய படங்கள், உறவுகள், வாழ்க்கையில் எடுத்த முடிவுகள் என அனைத்தையும் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
முதல் படத்திலிருந்து இப்போது வரை கைகோத்து நின்று கொண்டிருப்பதைச் சந்தோஷமாகப் பார்க்கிறேன். உன்னுடைய 50வது படத்துக்கு வாழ்த்துகள் ஜோ. உனக்கு நண்பனாக, கணவனாக இருப்பதற்கு இந்த உலகத்துக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
சரவணன் சார், சசிகுமார் சார், சமுத்திரக்கனி சார், இமான் சார், சூரி உள்ளிட்ட அத்தனை பேருக்கும் நன்றி. ஜோதிகாவுக்கு 50வது படம் சிறப்பாக வந்துள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த அத்தனை பேரும் எமோஷன் ஆனதைப் பார்த்துள்ளேன். ரொம்ப அழகான ஒரு படத்தை எடுத்துள்ளோம் என்ற மகிழ்ச்சி அனைவருக்குமே உண்டு”
இவ்வாறு சூர்யா பேசினார்.