நிகழ்நிலையில் நடைபெறவுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பை முழுமையாக நிராகரிக்கின்றோமென யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையிலே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையிலே,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35வது பட்டமளிப்பு விழா பகுதி இரண்டானது செப்டம்பர் 16,17,18 ஆம் திகதியில் நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் தற்போதைய கொரோனா ஊரடங்கு காரணமாக ஒக்டோபர் 7,8,9ம் திகதிகளில் நடாத்துவதாக பிற்போடப்பட்டது.
எனினும் அந்த திகதிகளில் மாணவர்களை நேரில் அழைத்து பட்டமளிப்பை நடாத்துவதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை ஒக்டோபர் 7ம் திகதி நிகழ்நிலையில் நடாத்துவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
எனினும் இத் தீர்மானம் தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விருப்பமின்மை காணப்படுகின்றது. இதுதொடர்பாக நாம் 15.9.2021 அன்று துணைவேந்தருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம்.எனினும் துணைவேந்தரிடம் இருந்து சாதகமான பதில் எமக்கு கிடைக்கவில்லை.
எனவே நாடு முழுவதும் வழமைக்கு திரும்பிய பின்னர் நேரடியாக பட்டமளிப்பு விழாவை நடத்துவதற்கே மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். எனவே பட்டமளிப்பு விழாவை நிகழ்நிலையில் நடத்தாமல் நேரடியாக மாணவர்களை அழைத்து பட்டமளிப்பு விழாவை நடாத்த யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தை கோருகின்றோம் என்றுள்ளது.