வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்வெட்டியில் 2 பிள்ளைகளின் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பித்த உறவினர்களில் ஒருவர் 3 வாரங்களின் பின்னர் இன்று திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பிரதான சந்தேகநபர் தப்பியோடி விட்டார்.
கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதி நள்ளிரவு 11.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் சுப்பிரமணியம் கிருசாந்தன் (30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் மனைவியின் சகோதரியின் கணவரான 25 வயதானவரே கொலையில் ஈடுபட்டார்.
எதிர்பாராத விதமான இருதய பகுதியில் கத்திக்குத்திற்கு இலக்கான கிருசாந்தன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.
கொலை பிரதான சந்தேகநபரும், உடந்தையாக இருந்தவரும் தலைமறைவாகினர். உடந்தையாக இருந்தவரும் கொல்லப்பட்டவரின் உறவினரே.
தலைமறைவான சந்தேக நபர்கள் திருகோணமலை பொலிஸ் பிரிவில் தலைமறைவாகி உள்ளதாக காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்தது.
இதையடுத்து, திருகோணமலை பொலிஸார் அவர்கள் பதுங்கியிருந்த இடத்தை திடீர் சுற்றிவளைப்பு செய்தனர். இதில், கொலைக்கு உடந்தையாக இருந்த இரண்டாவது சந்தேகநபரான 29 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார். பிரதான சந்தேபநபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.