கேரளாவின், திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் கடற்கரையில் 300 கிலோ ஹெரோயின் போதைப்பொருள், 5 ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் 1,000 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம், சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் ஆயுத வர்த்தக மோசடி குழுவினரின் நடவடிக்கை, இலங்கையில் விடுதலைப்புலிகளை புத்துயிர் பெற செய்வதை நோக்கமாகக் கொண்டது என இது குறித்து விசாரணை நடத்தி வரும் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ)சந்தேகிக்கிறது.
மார்ச் 18ஆம் திகதி உளவுத்துறை தகவலொன்றை தொடர்ந்து, விழிஞ்சம் கடற்கரைக்கு அப்பால், இந்திய கடலோர காவல்படையினால் இலங்கையில் பதிவு செய்ய்பட்ட பலநாள் மீன்பிடி படகொன்றை கைப்பற்றியது.
அந்த படகிலிருந்தே மேற்படி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. படகிலிருந்த 6 சிங்கள மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் இந்த வழக்கை விசாரித்து வந்ததால், தமிழக மற்றும் கேரள உளவுத்துறைகள் இதில் அக்கறை காண்பிக்காமல் விட்டு விட்டார்கள் என்பதை அந்த உளவுத்துறை வட்டாரங்கள் தற்போது ஏற்றுக்கொள்கிறார்கள்.
வழக்கை விசாரித்த போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் முதலில், படகிலிருந்த 6 சிங்களவர்கள் மீதும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யவிருந்தது. எனினும், இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் மேலதிக விசாரணைகள் நடத்திய பின்னர், மேலும் ஆழமான தகவல்கள் வெளிவந்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
“என்சிபி கப்பலில் இருந்த ஆறு சிங்களவர்களை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவிருந்தது, என்ஐஏ உள்ளே நுழைந்து மேலும் விசாரித்தது” என்று கேரள காவல்துறையுடன் இணைந்த ஒரு உளவுத்துறை அதிகாரி கூறினார்.
இந்திய தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணையில் பின்னர் ஆறு சிங்களவர்களும், தொழிலாளர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையில், ஓகஸ்ட் மாதம் கேரளாவின் அங்கமாலியில் வைத்து ராஜன் கைது செய்யப்பட்டார். புலிகளுடன் தொடர்புடைய குழுக்களுடனான தொடர்பிற்காக அவர், தமிழ்நாடு கியூ-பிராஞ்ச் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்திய தேசிய புலனாய்வு நிறுவனத்தின் விசாரணையில் பின்னர், படகில் இருந்த துரையா செய்மதி தொலைபேசி வழியாக டுபாயிலுள்ள குழுக்களுடன் தொடர்பு கொண்டதற்கான அறிவியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
சுரேஷ் மற்றும் அவரது சகாவான சௌந்தரராஜன் ஆகியோரை கைது செய்வதற்கான ஆதாரங்கள் இதன்மூலமே பெறப்பட்டுள்ளன.
கைதானவர்களுடன் தொடர்புடைய கேரளா, தமிழ்நாட்டு தங்குமிடங்களில் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் நடத்திய தேடுதலில்,
புலிகளுடன் தொடர்புடையவை உள்ளிட்ட பல குற்ற ஆவணங்கள், செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.
மார்ச் 18 சம்பவம் ஒரு தனியான சம்பவம் அல்ல என உளவுத்துறை குறிப்பிடுகிறது. ராஜன் கைது செய்யப்பட்ட பிறகு, கோடிக்கணக்கான பண பரிவர்த்தனைகள் உட்பட, அவரிடம் இருந்து ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டன.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் ஒரு சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் என்பது கண்டறியப்பட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஹாஜி சலீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார். டுபாய், பாகிஸ்தான் மற்றும் ஈரான் இடையே அடிக்கடி பயணம் செய்துள்ளார். ராஜன் இந்தியாவின் கொல்லைப்புறம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் முக்கிய பங்கு வகித்தார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
டுபாயில் கைது செய்யப்பட்ட பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரன் மாக்கந்துர மதுஷை, சுரேஷ் டுபாயில் சந்தித்து பேசியதற்கான ஆதாரங்களுள்ளதாக தமிழக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
மார்ச் 18 அன்று கடத்தப்பட்ட 300 கிலோகிராம் ஹெரோயினும் பணம் சம்பாதிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம். ஆனால், கொண்டு செல்லப்பட்ட 5 துப்பாக்கிகளும், இலங்கையிலுள்ள விடுதலைப் புலிகளின் சிலிப்பர் செல்களிற்காகவே என்பது விசாரணையில் தெரிய வந்தது“ என அந்த உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.