ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பிச் செல்லும் போது, பெருமளவுபணத்துடன் தப்பிச் சென்றதாக காபூலிலுள்ள ரஷ்ய தூதரகத்தை மேற்கோள் காட்டி RIA செய்திச் சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
4 கார்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் நிறைய பணம் அடைக்கப்பட்டதாகவும், அதில் அடைக்க முடியாத பணம் நிலத்தில் கொட்டிக் கிடந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் காபூலுக்குள் நுழைந்ததை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தானை விட்டு ஜனாதிபதி கானி வெளியேறினார். இரத்தம் சிந்துவதைத் தவிர்க்க விரும்புவதாக அவர் கூறினார். தற்போது இருக்கும் இடம் தெரியாkலுள்ளது. அவர் தஜிகிஸ்தானில் இருக்கலாமென தெரிகிறது.
ரஷ்யா காபூலில் ஒரு இராஜதந்திர இருப்பை தக்கவைத்துக்கொள்வதாகக் கூறியதுடன், தலிபான்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள விரும்புவதாகவும், அவர்களை நாட்டின் ஆட்சியாளர்களாக அங்கீகரிப்பதில் அவசரமில்லை என்றும் அவர்களின் நடத்தையை உன்னிப்பாக அவதானிப்பதாகவும் கூறுகிறது.
காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் நிகிதா இஷ்சென்கோ, RIA செய்தியிடம், “(வெளியேறும்) ஆட்சியின் வீழ்ச்சியைப் பொறுத்தவரை, கானி ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச் சென்ற விதம் இது மிகவும் திறமையாக செயற்படுத்தப்பட்டது” என்றார்.
“நான்கு கார்களில் பணம் நிறைந்திருந்தது. அவர்கள் பணத்தின் மற்றொரு பகுதியை ஹெலிகொப்டரில் அடைக்க முயன்றனர். ஆனால் முழுப்பணத்தையும் அதற்குள் வைக்க முடியவில்லை. அதனால் எஞ்சிய பணம் தார்ச்சாலையில் கிடந்தது, ”என்று அவர் கூறினார்.
ரஷ்ய தூதரக செய்தித் தொடர்பாளர்நிகிதா இஷ்சென்கோ, ரொய்ட்டர்ஸிடமும் தனது கருத்தை உறுதிப்படுத்தினார். அவர் தனது தகவலின் ஆதாரமாக “சாட்சிகளை” மேற்கோள் காட்டினார்.
ஆப்கானிஸ்தானில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சிறப்பு பிரதிநிதி ஜமீர் கபுலோவ், தப்பியோடும் அரசாங்கம் எவ்வளவு பணத்தை விட்டுச்செல்லும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கூறினார்.
“தப்பி ஓடிய அரசாங்கம் அரச பட்ஜெட்டில் இருந்து அனைத்து பணத்தையும் எடுக்கவில்லை என்று நம்புகிறேன். ஏதாவது இருந்தால் அது பட்ஜெட்டின் அடித்தளமாக இருக்கும், ”என்று கபுலோவ் மொஸ்கோவின் எக்கோ மொஸ்க்வி வானொலி நிலையத்திடம் கூறினார்.