இரண்டு எம்.பி.க்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்கள் சிலர் கடந்த இரண்டு வாரங்களுக்குள் COVID-19 தொற்றுக்கு உள்ளான நிலையில், அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்தலாமா என்பதை முடிவு செய்ய நாளை காலை 11 மணிக்கு கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, இந்த கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர வெள்ளிக்கிழமை தொற்றிற்குள்ளானார். முன்னதாக, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன திசாநாயக்க, பதுளை மாவட்ட எம்.பி திஸ்ஸ குட்டியாராச்சி, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி, திலீப் வெதஆராய்ச்சி ஆகியோர் தொற்றிற்குள்ளாகினர்.
கூடுதலாக, பல பாராளுமன்ற ஊழியர்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பணியிலிருந்த காவல்துறை உத்தியோகத்தர்களும் தொற்றிற்குள்ளாகியுள்ளனர். மருத்துவ மையம் உள்ளிட்ட சில பிரிவுகள் மூடப்பட்டு கிருமி நீக்கம் செய்யப்பட்டது. இப்பகுதிகள் இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
அடுத்த வாரம் நான்கு நாட்களில் பாராளுமன்றம் கூடுகிறது. செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளி வரை கூட்டங்கள் நடைபெறும். சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு நான்கு நாட்களும் கூட்டங்கள் நடத்தப்படுவது மிகவும் சாத்தியமற்றது என நேற்று தெரிவித்தார்.
ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும்.
இதற்கிடையில், ஓகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய திகதிகளில் பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் நெருங்கிய தொடர்புகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை பாராளுமன்ற அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.