வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து தொடர் சர்ச்சைகள் எழுந்துவரும் நிலையில், பின் தலையில் பிளாஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் வெளியான அவரது புதிய புகைப்படம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை 24 முதல் ஜூலை 29 ஆம் திகதி வரை நடந்த வடகொரிய இராணுவக் கூட்டத்தில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். அப்போது அவரது தலையின் கீழ் பெரிய அளவில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இதனால் கிம் சமீபத்தில் அறுவை சிகிச்சை ஏதேனும் செய்து கொண்டாரா? என்பது போன்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
முன்னர் இந்த இடத்தில் அவருக்கு பெரிய கருப்பு புள்ளி காணப்பட்டது.
இரண்டு படங்களும் வெளியான பின்னர், அவருக்கு மூளைப்புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக என்ற ஐயம் எழுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சமீபகாலமாக வெளி உலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்கின் பிறந்த தினக் கொண்டாட்டத்திலும் பங்கேற்கவில்லை.
கடந்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. 2011ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற பின், முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கிம்முக்கு சமீபத்தில் நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து கிம்மின் உடல் நிலை குறித்துப் பல்வேறு வதந்திகள் பரவின. பின்னர் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த சில மாதங்களாகப் பொது நிகழ்வுகளில் கிம் பங்கேற்று வருகிறார்.
எனினும், வியத்தகு முறையிலான அவரது எடையிழப்பும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தது.