28.7 C
Jaffna
December 21, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

வீடு புகுந்து தாக்கிய இளைஞர்கள்… பெண்களிடம் அடிவாங்கும் ஒப்பந்தம்… பேஸ்புக் வீடியோ… இளைஞன் தற்கொலை: நாவாந்துறை சம்பவத்தின் பின்னணி என்ன?

யாழ்ப்பாணம்,நாவாந்துறை பகுதியில் 20 வயதான இளைஞன் தற்கொலை செய்தது தொடர்பான சர்ச்சையுடன் தொடர்புடைய வீடியோ காணொலியுடன் தொடர்புடையவர்கள் நாளை மறுநாள் (2) நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

5 பெண்கள், ஒரு ஆண் என ஆறு பேர் கைதாகி, அன்றைய தினமே பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். திங்கள்கிழமை அவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்கள்.

நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியை சேர்ந்த புவனேந்திரராசா சுகந்தன் (20) என்ற இளைஞனே உயிரிழந்தார்.

26ஆம் திகதி தனது 20வது பிறந்தநாளிலன்று உயிரை மாய்த்தார்.

இந்த சம்பவம் தொடர்பான தகவல்களை தமிழ்பக்கம் முதன்முதலில் பகிரங்கப்படுத்தியது. இதை தொடர்ந்து, இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. உயிரிழந்த இளைஞன் தரப்பினர் மற்றும் பெண்கள் குழுவால் தாக்கப்பட்ட 3 இளைஞர்கள் தரப்பினால் பொலிஸ் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்கள் வீடு புகுந்து தாக்கியதில் காயமடைந்த குடும்பத் தலைவர்

தமிழ் பக்கம் முதன்முதலில் இந்த செய்தியை பகிரங்கப்படுத்திய போது, பெண்கள் தரப்பினரால் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருந்தே தகவல்கள் விரிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலைமைக்கு காரணமாக அமைந்த ஆரம்ப சூழல் பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றிருக்கவில்லையென சிலர் அபிப்பிராயப்பட்டதால், சில ஆரம்ப தகவல்களையும் தருகிறோம்.

20 வயதான இளைஞனின் உயிரிழப்பு மிகச் சோகமானது. இளைஞர்கள் மிளகாய்த்தூள் அடித்து தாக்கப்பட்டது, அந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது போன்ற சம்பவங்கள் ஏற்க முடியாத, மோசமான நடவடிக்கைகள் என்பதில் இரண்டு கருத்திற்கு இடமில்லை.

அதேபோல, இந்த நிலைமைக்கு வித்திட்ட சம்பவங்களும் மோசமானவை.

நாவாந்துறை, சோழபுரம் பகுதியில் 16 வயதான சிறுவன் ஒருவர் புறா வளர்த்துள்ளார். கடந்த 11ஆம் திகதி மாலை ஓரிரு இளைஞர்கள் அந்த சிறுவனின் வீட்டிற்கு வந்து, தமது புறா இறங்கியதா என வினவியுள்ளனர்.

தாக்குதலிற்குள்ளான குடும்பத் தலைவி

எனினும், சிறுவன் அவர்களிற்கு பதிலளிக்காமல்  வீட்டுக்குள் சென்று விட்டார்.

தாம் கேட்டதற்கு சிறுவன் பதிலளிக்கவில்லையென்ற ஆத்திரத்தால், இரவு 7 மணிக்கு சுமார் 10-15 வரையான இளைஞர்கள் திடீரென அந்த வீட்டுக்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர்.

புறா வளர்த்த 16 வயதான சிறுவன், அவரது தம்பி, 19 வயதான அக்கா, தாய், தந்தை என வீட்டிலிருந்த அனைவர் மீதும் கொடூரமாக தாக்கியுள்ளனர். கையில் கிளிப் போட்டு தாயாரின் முகத்தில் தாக்கப்பட்டது. 19 வயதான யுவதி வயரினால் முதுகில் கடுமையாக தாக்கப்பட்டார். அவரது முதுகில் பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. தந்தையும் காயங்களிற்கு இலக்காகினார். புறா வளர்த்த 16 வயதான சிறுவனின் தலையில்பெரிய காயம் ஏற்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் 3 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

தந்தைக்கு முன்பாக சிறுவன் அபயக்குரல் எழுப்ப எழுப்ப தாக்கப்பட்டார்.

இது குறித்து தாம் பொலிசாரிடம் முறையிட்ட போதும், கொரோனா நிலவரத்தினால் முறைப்பாட்டை பதிவு செய்யமல், பின்னர் வரும்படி அனுப்பியதாக தாக்குதலிற்குள்ளான குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, தாக்குதிற்குள்ளானவர்களின் உறவினர்கள் கொந்தளித்து, தாக்குதல் நடத்திய இளைஞர்கள் வீடுகளிற்கு சென்றுள்ளனர். எனினும், தாக்குதல் நடத்திய இளைஞர்கள் தலைமறைவாகி விட்டனர்.

மறுநாளும், இளைஞர்களின் வீடுகளிற்கு சென்று, தாக்குதல் நடத்தியவர்கள் வந்து மன்னிப்பு கோராவிட்டால், இளைஞர்களை காணும் இடத்தில் தாக்குவோம் என எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து, தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட உள்ளூர் இளைஞர்களின் பெற்றோர்கள் சிலர், பிரதேசத்திள்ள முக்கியஸ்தர்களை சந்தித்து இந்த விவகாரத்தை சுமுகமாக தீர்க்க உதவுமாறு கேட்டுள்ளனர்.

அந்த பிரமுகர்கள், தாக்கப்பட்ட குடும்பத்தின் உறவினர்கள் தரப்புடன் இது பற்றி பேசிய போது, “பெண்களிற்கு வீடு புகுந்து அடித்தவர்கள், பெண்களிடமே அடி வாங்கி விட்டு செல்லட்டும். பெண்கள் மட்டுமே அடிப்பார்கள். தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் வந்து பெண்களிடம் அடி வாங்கி விட்டு, மன்னிப்பு கேட்டு விட்டு செல்லட்டும். ஆண்கள் அடிக்க மாட்டோம்“ என தெரிவித்துள்ளனர்.

ஊர்ப்பிரமுகர்கள் இதனை தாக்கிய இளைஞர்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.

“எமது பிள்ளைகள் செய்தது பிழைதான். பெண்களிடம் அடி வாங்கினால்தான் திருந்துவார்கள்“ என அந்த பெற்றோர் தம்மிடம் தெரிவித்ததாக, ஊர்ப்பிரமுகர்கள் தமிழ் பக்கத்திடம் தெரிவித்தனர்.

நான்கு இளைஞர்கள் மீது பெண்கள் கொடூர தாக்குதல் நடத்தும் வீடியோவின் பின்னணி கதை இதுதான்.

தாக்குதலிற்குள்ளான பிள்ளைகளில் ஒருவர்

அதாவது, கல்யாண வீடுகளிற்கு சென்று சாப்பிட்டு விட்டு வருவதை போல, இளைஞர்கள் வந்து ஒரு முறை பெண்களிடம் அடி வாங்கி விட்டு செல்லட்டும் என இரு தரப்பும் இணக்கப்பாட்டுடன் ஒரு ஏற்பாட்டிற்கு வந்தன.

சோழபுரத்தில் தாக்குதிற்குள்ளான குடும்ப தலைவின் சகோதரிகள், உறவினர்கள் பல பகுதிகளில் வசித்தனர். சம்பவத்தை அறிந்ததும், வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு, மன்னிப்பு கேட்டு அடி வாங்க வரும் இளைஞர்களிற்கு இரண்டு மெத்து மெத்திவிட்டு செல்லலாம் என சோழபுரம் வீட்டில் கூடினர்.

மாலை 3 மணியளவில் இரண்டு இளைஞர்களை அழைத்துக் கொண்டு பெற்றோர் சென்றனர். இந்த விவகாரத்தை சமரசமாக தீர்க்க முயன்ற ஊர் பிரமுகர்களும் அங்கு நின்றனர். இரண்டு இளைஞர்களும் வீட்டுக்குள் அழைத்த செல்லப்பட, பெற்றோர் வீதியில் நின்றனர். ஆண்கள் அடிக்காமல் ஊர் பிரமுகர்கள் கவனித்துக் கொள்ள, பெண்கள் தாக்கியுள்ளனர்.

இந்த இடத்தில்தான் விபரீதம் நிகழ்ந்தது. ஊர் பிரமுகர்களுடன் பேசப்பட்டபடி, பெண்கள் அடித்து விட்டு, விடுவார்களே தவிர, மிளகாய்த்தூள் அடிப்பது திட்டமிடப்படவில்லை. தாக்குதலில் ஈடுபட்ட சிலரின் இரகசிய திட்டம் அது. இளைஞர்களிற்கு மிளகாய்த்தூள் அடிக்கப்பட்டது, ஊர்ப்பிரமுகர்களிற்கும், மன்னிப்பு கேட்க வந்தவர்களிற்கும் அதிர்ச்சியளிக்கும் சம்பவம்.

இந்த நடவடிக்கையில் சில பெண்கள் ஈடுபட்டதால், சுமுகமாக மன்னிப்பு கேட்டு, பெண்களிடம் இரண்டு அடி வாங்கி விட்டு வரும் ஏற்பாட்டிலும் குழப்பம் நேர்ந்தது.

பெண்களின் இந்த திடீர் நடவடிக்கையால், ஊர்ப்பிரமுகர்களும் அதிர்ச்சியடைந்தனர். அவர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

மாலை 3.30 மணியளவில் இரண்டாவது தொகுதியாக மேலும் 2 இளைஞர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞனும் இதில் அழைத்துச் செல்லப்பட்டார். தம்முடன் ஊர்ப்பிரமுகர்களையும் வருமாறு, அவர்களின் பெற்றோர் தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. எனினும், முதலாவதாக மன்னிப்பு கேட்க வந்தவர்கள் மீது விதிமீறி தாக்குதல் நடந்தாலோ என்னவோ, ஊர்ப்பிரமுகர்கள் யாரும் அவர்களுடன் செல்லவில்லை.

தாக்குதலிற்குள்ளான பிள்ளைகளில் ஒருவர்

அத்துடன், உறவினர்கள் கோபத்துடன் இருப்பதால்- விபரீதமான நிலைமையிருந்ததால், மறுநாள் மன்னிப்பு கேட்க செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

எனினும், அங்கு கூடியிருந்த உறவினர்கள் அதற்கு இணங்கவில்லை. “இன்று… இப்பொழுதே“ வர வேண்டுமென ஆக்ரோசமாக நின்றுள்ளனர். இதையடுத்து, என்ன செய்வதென தெரியாத நெருக்கடியில், இளைஞர்களை அழைத்துச் செல்வதென பெற்றோர் முடிவெடுத்தனர்.

இதன்படி, உயிரை மாய்த்த இளைஞனும், இன்னொரு இளைஞனும் மாலை 3.30 இற்கு சற்று பின்னதாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதில், குழப்பத்தை ஏற்படுத்திய அடுத்த சம்பவம்- தாக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.

இப்பொழுது ஒரு உயிரை இழந்து, ஊருக்கும் கொந்தளிப்பான நிலைமையை ஏற்படுத்த காரணமாக பலரது அவசரங்களும், ஆத்திரங்களும் காரணமாக அமைந்து விட்டது.

தமக்கு பதில் சொல்லவில்லையென 16 வயது இளைஞனின் வீடு புகுந்து குடும்பத்தினரையே தாக்க வேண்டுமென்ற ஆத்திரமும், அவரமும்…

இந்த சம்பவத்தில் 10 இற்கும் மேற்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருந்தும், தமது பிள்ளைகள் செய்தது பிழையென குறிப்பிட்டு, பெண்களிடம் அடிவாங்கி, மன்னிப்பு கேட்கும் சமரச முயற்சிக்காக  4 இளைஞர்களை பெற்றோர் அழைத்து வந்த போதும், ஏற்கனவே பேசப்பட்டதற்கு மாறாக அவர்கள் மீது மிளகாய்த்தூள் விசிறி, பச்சை மிளகாய் தேய்த்து கொடூரமான தாக்குதல் நடத்திய ஆத்திரமும், அவசரமும்…

தாக்குதலிற்குள்ளான பிள்ளைகளில் ஒருவர்

அந்த தாக்குதலை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த ஆத்திரமும், அவசரமும் இப்பொழுது பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள் சமூக விழுமியங்களை மறந்து, போதைப்பொருளுக்கும், சினிமா குழு மோதல் கலாச்சாரத்திற்கும் அடிமையாகி வரும் நிலையில், இப்படியான விபரீத சம்பவங்கள் பல பதிவாகி வருகின்றன. இதற்கு இளைஞர்களை மட்டும் குறை கூறாமல், ஒரு சமூகமாக அதை எவ்வாறு தடுத்து நிறுத்துவதென சிந்திக்க வேண்டும்.

எடுத்ததுக்கு எல்லாம் அடிதடி, காதில் தோடு, கலர் தலைமுடி, பெண்களுடன் வக்கிர பேச்சு, போதைப்பொருள் பாவனையெல்லாம் ஒரு ஹீரோவின் அடையாளங்களல்ல. தமிழ் சினிமாவில் மட்டுமே அவை ஹீரோவின் அடையாளங்கள். நிஜ வாழ்க்கையில் அவை ரௌடிகளின் அடையாளம் மட்டுமே என்பதையும் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சிந்தனையும், புரிதலும் இருந்தால் மட்டுமே தமிழ் சமூகம் மீட்சியடையும்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
4

இதையும் படியுங்கள்

உட்கட்சி மோதல் உச்சம்… 4வது வழக்கில் மத்தியகுழு முடக்கப்படலாம்: இலங்கை தமிழ் அரசு கட்சி ஸ்தம்பிக்கும் நிலை!

Pagetamil

அரச வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு

east tamil

எட்கா ஒப்பந்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் – கலாநிதி நந்தலால் வீரசிங்க

east tamil

2025 பெப்ரவரி முதல் தனியார் வாகன இறக்குமதிக்கு அனுமதி!

Pagetamil

அர்ச்சுனாவை நாடாளுமன்றத்திலிருந்து தகுதி நீக்குங்கள்: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு!

Pagetamil

Leave a Comment