வவுனியாவில் மனித உரிமைகள் இயக்கம் என்னும் பெயரில் இளம் பெண்களால் பணம் பெற்று மோசடி இடம்பெறுவதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, கைது செய்யப்பட்ட பெண்கள் எச்சரிக்கையின் விடுவிக்கப்பட்டனர்.
வவுனியா, குட்செட் வீதியில் இன்று (21) காலை முதல் 6 இளம் பெண்கள் வீடு வீடாக சென்று தாம் மனித உரிமைகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு என பணம் பெற்றுள்ளனர்.
குறித்த 6 பெண்களில் ஒருவர் தமக்கு கீழ் 500 ரூபாய் சம்பளத்திற்கு பெண்களை திரட்டி வீடு வீடாக சென்று பணம் பெற்று, அதில் தான் நாள் ஒன்றுக்கு 1000 ரூபாய் வீதம் பணம் எடுத்துக் கொண்டு மிகுதிப் பணத்தை அனுராதபுரத்தில் உள்ள பெண் ஒருவருக்கு வழங்கி வந்ததாக விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, 5 பெண்களையும் வழிநடத்திய பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டு கடுமையான எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார்.
இவ்வாறான மோசடியில் ஈடுபட்டவர்கள் தாண்டிக்குளம், கோவில்குளம், விக்ஸ்காடு, கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.