ஆம்புலன்ஸில் பெட்ரோல் டேங்குக்கு அருகில் தனி அறை அமைத்து 28 கிலோ கஞ்சா கடத்திய சென்னையைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக வேதாரண்யத்திற்கு கஞ்சா கடத்தி வரப்பட்டு, அங்கிருந்து இலங்கைக்குக் கடத்த இருப்பதாக நாகை கியூ பிராஞ்ச் போலீஸாருக்கு இன்று (2) ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், கியூ பிராஞ்ச் போலீஸார், நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் ஆம்புலன்ஸை வழிமறித்து சோதனை செய்தனர். சோதனையில், ஆம்புலன்ஸின் பெட்ரோல் டேங்க் அருகில் ஒரு தனி அறை அமைக்கப்பட்டு, அதில் 28 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
அதையடுத்து, கியூ பிராஞ்ச் போலீஸார் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், உரிமையாளருமான சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் (46), சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மகேந்திரன் (24), சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் (26), சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சுந்தர் (36) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.
யார் மூலமாக இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.15 லட்சமாகும்.