தினசரி கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலிம் டெல்டா கோவிட் -19 தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வரும் நேரத்தில், இந்த விவகாரத்தை முறையாக கவனிக்காவிடின், கடந்த சில மாதங்களில் இந்தியாவில் ஏற்பட்டதை போன்ற ஒரு ஆபத்தான சூழ்நிலையை இலங்கை அனுபவிக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்க செயற்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இது குறித்து தெரிவிக்கையில், கொரோனா தொற்று காரணமாக நாளாந்த இறப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார்.
நாடு மீண்டும் திறக்கப்பட்டவுடன், கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் உள்ளவர்கள் முகக்கவசங்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள், சமூக இடைவெளி பேணப்படுவதில்லை என்று குறிப்பிட்டார்.
டெல்டா வைரஸ் மாறுபாடு இலங்கைக்குள் நுழைந்துள்ளதால், சில முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தையும் சுகாதார அதிகாரிகளையும் கோரியுள்ளார்.
டெல்டா மாறுபாட்டு தொற்றாளர்கள் பதிவாகிய பின்னர் மற்ற நாடுகள் மெதுவாக மீண்டும் திறக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.
COVID-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசிகளை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது. தடுப்பூசி திட்டத்துடன் மேலதிகமாக, சீரற்ற சோதனை மற்றும் அதிகரித்த பிசிஆர் சோதனை திறன்களிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதிக ஆபத்து நிறைந்த பகுதிகளை வரையறுத்து, வைரஸ் வேகமாக பரவி வருவதை பொதுமக்களுக்கு தெரிவிக்குமாறு அவர் சுகாதார அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
டெல்டா வைரஸ் மாறுபாட்டை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.