போதைப்பொருளுக்கு அடிமையான சகோதரர்கள் இருவரையும் ஒரு வருட புனர்வாழ்வுக்கு அனுப்பிவைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிபதி ஏ.பீட்டர் போல் கட்டளையிட்டார்.
பெற்றோர் மன்றில் முன்னிலையாகி, பிள்ளைகளை சீர்திருத்தத்திற்கு அனுப்ப விண்ணப்பம் செய்தமைக்கு அமைய இந்தக் கட்டளையை நீதிமன்றம் நேற்று வழங்கியது.
யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 19 வயதுடைய சகோதரர்கள் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்களின் பெற்றோர் சட்டத்தரணியின் ஊடாக மன்றில் முன்னிலையாகி, பிள்ளைகளை புனர்வாழ்வளிக்கும் விண்ணப்பத்தை முன்வைத்தனர்.
“சந்தேகநபர்கள் இருவரும் நீண்டநாட்களாக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்களை நல்லொழுக்கத்திற்கு மாற்ற பெற்றோர் பெரும் முயற்சி எடுத்தும் பயனற்று போயின. சகோதரர்களான இருவரையும், சீர்திருத்தி, நற்பிரஜைகளாக சமூகத்தில் வாழ நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என பெற்றோர் சார்பில் சட்டத்தரணி விண்ணப்பித்தார்.
பெற்றோரின் விண்ணப்பம், சந்தேகநபர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டமை ஆகியவற்றின் அடிப்படையில், சந்தேகநபர்கள் இருவருக்கும் ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்காலத்தில் சகோதரர்களில் ஒருவரை வெலிக்கந்தை, கந்தக்காடு முகாமிற்கும், மற்றையவரை கண்டி, பல்லேகல முகாமிற்கும் அனுப்பி போதைப்பொருளில் இருந்து விடுபட புனர்வாழ்வளிக்க கட்டளையிடப்பட்டது.