எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த அரசு தீவிரமாக செயறபட்டு வருகிறது. இதற்கான அறிவித்தல் விரைவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான முன்னோடி நடவடிக்கையாக ஆளுங்கூட்டணியிலுள்ள முன்னாள் மாகாணசபை உறுப்பின்களை எதிர்வரும் புதன்கிழமை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கு முன்னராக தேர்தல் சட்டத்தை அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
முந்தைய விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் வாக்கெடுப்புகளை நடத்த மாகாண சபை தேர்தல் (திருத்த) சட்டத்தில் திருத்தங்களை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை.
.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் காலத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்றில், மாகாணசபை தேர்தல்கள் பழைய முறைமையின் கீழ் அல்லது ஒரு புதிய சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த முடியும் என தெரிவித்திருந்தது.
நாட்டிலுள்ள 9 மாகாணசபைகளும் தற்போது ஆளுனரின் ஆட்சியிலேயே உள்ளன. மாகாணசபைகளின் காலம் முடிந்த பின்னரும் சில சபைகளில் வருடக்கணக்காக ஆளுனர் ஆட்சி நடந்து வருகிறது.
மாகாணசபை தேர்தலை நடத்துவதென திடீர் முடிவை அரசு ஏன் எடுத்ததென்ற காரணம் இதுவரை வெளியாகவில்லை. எனினும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களில் இதுவும் உள்ளடங்கியிருந்ததும், மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டுமென இந்தியா அழுத்தம் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.