மட்டக்களப்பில் பொலிசாரின் காவலில் இருந்த போது உயிரிழந்த இளைஞனின் சடலம் எதிர்வரும் திங்கள்கிழமை மீளவும் தோண்டியெடுக்கப்படவுள்ளது. சடலம் மீதான மீள் பிரேத பரிசோதனை பேராதனை பல்கலைகழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஒருவரினால் நடத்தப்படும்.
மட்டக்களப்பு நீதிமன்றத்தில் இன்று (18) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சடலத்தை மீள தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்குட்படுத்த நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
மட்டக்களப்பு, இருதய புரத்தை சேர்ந்த சந்திரன் விதுஷன் எனும் இளைஞன், கடந்த 3 ஆம் திகதி மட்டக்களப்பு தலைமையக பொலிசாரால் கைது செய்யப்பட்டார். போதை பொருள் வியாபாரம் செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சுமார் இரவு 10.45 மணியளவில் அவரை கைது செய்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
எனினும், மறுநாள் காலை அவர் உயிரிழந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
விதுஷனை பொலிசாரே அடித்து கொன்றதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியிருந்தனர். கைது செய்த இடத்திலேயே அவருக்கு விலங்கிட்டு அந்தரங்க பகுதிகளிலும் தாக்கியதாக, குடும்பத்தினர் ஊடகங்களிற்கு தெரிவித்தனர்.
எனினும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடந்த பிதே பரிசோதனையின் பின்னர், விதுஷன் நான்கு பக்கட் ஐஸ் போதைப்பொருளை விழுங்கியதாகவும், அது நெஞ்சுப்பகுதியில் வெடித்து உயிரிழந்ததாகவும் தெரிய வந்ததாக, சட்டவைத்திய அதிகாரியினால் கூறப்பட்டது.
எனினும், உறவினர்கள் அதை மறுத்தனர். சட்ட வைத்திய பரிசோதனை முடிவில் சந்தேகம் தெரிவித்திருந்தனர.
இந்த நிலையில் இன்று (18) மட்டக்களப்பு நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி அறையில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்றது.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்டத்தரணி கே.சுகாஷ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
வழக்கு விசாரணை தொடர்பில் தமிழ்பக்கத்திடம் சட்டத்தரணி கே.சுபாஷ் தெரிவிக்கையில்,
“இன்றைய வழக்கு விசாரணையின் போது பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டத. அந்த அறிக்கையில், விதுஷன் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டதால்தான் மரணம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், விதுஷனின் உடலில் காயங்கள் இருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது நாம் சில கேள்விகளை எழுப்பியிருந்தோம். பெற்றோர், ஊர் மக்களின் முன்பாகத்தான் விதுஷனை அடித்து அவரது கைகளில் விலங்கிடப்பட்டுத்தான் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின், விலங்கிடப்பட்ட ஒருவர் போதைப்பொருளை உட்கொள்ள வாய்ப்பில்லை.
ஐஸ் போதைப்பொருளை உட்கொண்டதால்தான் விதுஷன் உயிரிழந்ததாக சட்ட வைத்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார். எனினும், அவர் எதை உட்கொண்டார் என்பதை அரச பகுப்பாய்வு திணைக்களம்தான் கண்டறிய வேண்டும். சட்ட வைத்திய அதிகாரி கண்டறிய முடியாது என்பதை சுட்டிக்காட்டினோம்.
கைது செய்யப்பட்ட போது, அவரை பெற்றோர், சகோதரி, ஊர் மக்களின் முன்பாக தாக்கப்பட்டுள்ளார். அதனால் இந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் நம்பிக்கையில்லை. பிறிதொரு தகுதி வாய்ந்த அதிகாரி முன்னிலையில், மீளவும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என விண்ணப்பம் செய்தோம்.
இதன்போது, பொலன்னறுவை வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியின் பெயரை பொலிசார் சிபாரிசு செய்தனர்.
எனினும், பேராதனை பல்கலைகழக மருத்துவ பீடத்தின் தடயவியல் மருத்துவத் துறை பேராசிரியர் சரத்சந்திர கொடிகாரவின் பெயரை சிபாரிசு செய்தோம்.
இரண்டு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம், பேராசிரியர் சரத்சந்திர கொடிகாரவின் முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. வழக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்“ என்றார்.
அதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு அமைக்கப்பட்டு விசாணையிடம்பெற்று வருவதாக பொலிசார் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.