சிகரெட் மற்றும் பீடிக்கு அடிமையாக உள்ள தனது கணவரின் அருகில் செல்லவே துர்நாற்றம் வீசுகிறது, காதில் தோடு குத்தியுள்ள அவருடன் வெளியில் செல்ல விரும்பவில்லை, இதனால் விவாகரத்து செய்ய வேண்டிய நிலைமைக்கு தான் சென்றுள்ளதாக இளம் ஆசிரியையொருவர், அம்பாறை உகண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
25 வயதான பட்டதாரி ஆசிரியையொருவரே இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
உகண பொலிஸ் பிரிவில் வசிக்கும் இந்த தம்பதிக்கு கைக்குழந்தையொன்றும் உள்ளது. முறைப்பாட்டாளர் உகண பகுதியிலுள்ள அரச பாடசாலையொன்றில் கடமையாற்றி வருகிறார்.
29 வயதான அவரது கணவர் நிரந்தர தொழிலற்றவர். தற்போது அன்றாட உழைப்பாளியாக உள்ளார்.
யுவதி பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற போது, 4 வருடங்களின் முன்னர் காதலித்து, அண்மையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
முறைப்பாட்டையடுத்து, தம்பதியினரை உகண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அழைத்து விசாரணை நடத்தினார்.
திருமணத்தின் பின்னர் கணவர் சிகரெட், பீடிக்கு அடிமையாகியதாகவும், எவ்வளவோ சொல்லியும் அவர் அந்த பழக்கத்தை கைவிட மறுப்பதாகவும், இனி திருத்த முடியாது என்ற கட்டத்தை அடைந்து விட்டார் என்றும் மனைவி தெரிவித்துள்ளார்.
அவரிலிருந்து வெளிவரும் சிகரெட், பீடி துர்நாற்றம் தாங்க முடியாமல் பல முறை வாந்தியெடுத்ததாகவும், இதனால் கணவனிற்கு அருகில் செல்லவும் விரும்பவில்லையென தெரிவித்துள்ளார்.
தான் இது பற்றி பேசினால், சில நாள் புகைப்பதை கைவிட்டு, மீண்டும் ஆரம்பித்து விடுவார். பொறுக்க முடியாத கட்டத்தில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததாக தெரிவித்தார்.
அத்துடன், அண்மைக்காலமாக கணவர் தனது காதொன்றில் தோடு குத்தியுள்ளதாகவும், அதை அகற்றும்படி எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. தோடு குத்திய கணவருடன் வெளியிடங்களிற்கு செல்ல விரும்பவில்லை.
கணவரின் இதே பழக்கங்கள் தொடர்ந்தால், அவருடன் இனிமேல் வாழ முடியாது. விவகாரத்து செய்ய வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கணவருக்கு பொலிசார் விளக்கமளித்துள்ளனர். இந்த பழக்கங்கள் தொடர்ந்தால் மனைவி விவகாரத்து பெறுவதை தவிர வேறு வழியில்லையென்பதையும் சுட்டிக்காட்டினர்.
இதையடுத்த, இந்த பழக்கங்களை கைவிடுவதாக பொலிசாரிடம் கணவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாரம் கழித்து மீண்டும் பொலிஸ் நிலையம் வருமாறு அவர்களிற்கு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.