ஐநாவிடம் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் கொடுப்போம் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகள் கூட்டாக இணைந்து அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தமை தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடைசியாக நடைபெற்ற பாராளுமன்ற கூட்டுத் தொடரிலே வெளிவிவகார அமைச்சரை தமிழ் கட்சியில் எல்லோரும் சந்தித்து எங்களுடைய அரசியல் கைதிகள் விடுதலை சம்பந்தமாக கலந்துரையாடினோம். ஏற்கனவே ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இந்த கலந்து கொண்ட கட்சிகள் கையொப்பமிட்டு இது சம்பந்தமாக பேசுவதற்கான வாய்ப்பை கேட்டிருந்தோம்.
எங்களிடம் என்னென்ன பிரச்சினை இருக்கிறது என்று கேட்டறிந்து தன்னிடம் சொல்ல வேண்டும் என ஜனாதிபதியின் பிரதிநிதியாக கலந்து கொண்ட வெளிவிவகாரத்துறை அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் கூறியிருந்ததாக அவர் எங்களிடம் கூறியிருந்தார்.
அந்தவகையிலே எங்களுடைய அரசியல் கைதிகள் சம்பந்தமான முழு விபரத்தையும் நாங்கள் கையளித்திருக்கிறோம். அவரிடம் உரையாடியிருக்கிறோம். அந்த வகையிலே ஜனாதிபதியோடு பேசி மீண்டும் ஜனாதிபதியோடு சந்திப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை பெற்றுத்தருவதாக அவர் கூறியிருக்கின்றார்.
அந்தவகையில் நாங்கள் சிறையிலே வாடிக் கொண்டிருக்கின்ற அரசியல் கைதிகள் சம்பந்தமாகவும், வெளியிலே அவர்களுடைய குடும்பங்கள் படு மோசமான ஒரு துன்பத்தை அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் எடுத்து கூறியிருக்கின்றோம். அடுத்ததாக முக்கியமாக இந்த கொரோனா தொற்று என்பது சிறைக்கூடங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்தவகையிலே அவர்களுடைய விடுதலை சம்பந்தமாக ஓரளவுக்காகவேனும் அவர்களை பிணையில் அல்லது அவர்களுக்கு பொது மன்னிப்பளித்து இந்த அச்சு கொடுக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வதும் ஏனையவர்களுக்கு பிணை அடிப்படையில் பேசினோம். இருந்தாலும் அனைவரையும் விடுதலை செய்வது நன்றாக இருக்கும் என்பதுதான் எங்களுடைய பொதுவான விடயமாக இருந்தது. இந்த கலந்துரையாடல் மிக நேர்த்தியான முறையிலே நடைபெற்றது. இதற்கு அரசியல் கைதிகளுடைய குடும்பங்கள் வரவேற்பு செய்திருக்கிறார்கள். அந்தவகையிலே நாங்கள் அவர்களுடைய விடுதலை சம்பந்தமாக அடுத்த ஜனாதிபதி சந்திப்பிலே ஒற்றுமையாக சென்று குறித்த விடயம் சம்பந்தமாக பேச இருக்கிறோம்.
இலங்கை அரசானது ஐநா சபையினுடைய தீர்மானத்திலே இந்த அரசியல் கைதிகளுடைய விடுதலை சம்பந்தமாக கூறப்பட்டிருக்கிறது.
அந்தவகையிலே நாங்கள் ஏற்கனவே இந்த மகஜர்களை உயர்ஸ்தானியங்களுக்கு கொடுத்திருக்கிறோம். இப்பொழுது அமைச்சர் தினேஸ்குணவர்த்தனவிடம் கொடுத்திருக்கிறோம். ஐநா சபையிலே இந்த வழக்கினுடைய பின்னணி என்ன? அல்லது வழக்குகளில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்னென்ன கட்டங்களில் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள்? என்பதை நாங்கள் நிச்சயமாக சாட்சிகளோடு, அங்கே சொல்ல வேண்டும். இந்த விடுதலை சம்பந்தமான ஒரு நிலைப்பாடு அதிலே இருக்கின்றபடியால் நாங்களும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அந்தவகையிலே நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவர்களுக்கான விடுதலை சம்பந்தமான அனைத்து ஆதாரங்களையும் நிச்சயமாக கொடுக்க வேண்டும், கொடுப்போம் என தெரிவித்தார்.