தமிழகத்தின், கோவை காமாட்சிபுரி ஆதினம் 51 சக்தி பீடத்தில் கொரோனா தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக, கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோவை இருகூர் பகுதியில் உள்ள காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடத்தில் கொரோனா தேவி சிலையை வழிபாட்டுக்கு நிறுவியுள்ளனர்.
இதுகுறித்து காமாட்சிபுரி ஆதீனம் கூறுகையில், “கொரோனா வைரஸ் என்னும் கிருமியால் மனித வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது. அம்மை நோய், காலரா ஏற்பட்ட போது மக்கள் பல உயிர்களை இழந்தனர்.
திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்ற வாக்கின்படி கிராமங்களிலே மாரியம்மன், மாகாளியம்மன், பிளேக் மாரியம்மன் என்ற வழிபாட்டினை ஏற்படுத்தினர். வேப்பிலை கும்பங்களும் நடுகற்களும் வைக்கப்பட்டு வழிபட்ட இடம், பிற்காலத்தில் கோயிலாக மாறியது. இதற்காக எழுதப்பட்ட சாஸ்திரங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் மக்களாக ஏற்படுத்திய வழிபாடாகும்.
அதுபோல இன்று கொரோனோ கிருமி பாதிக்கப்பட்டவர்களை கண்டு பயப்படாமல் திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்று கொரோனா தேவி கருங்கல்லாலான சிலை வடிவமைக்கப்பட்டு 48 நாள் மகா யாகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த யாகத்துக்கு பக்தர்கள் யாரும் அனுமதி இல்லை. ஆலய பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். இன்று பழமை வாய்ந்த கிராமங்களில் மாரியம்மன், மாகாளியம்மன் இருப்பது போல இந்த கொரோனா தேவி வழிபாடும் அவசியமாகிறது. அரசின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப மக்கள் நடந்து கொள்ளும்படியும், முகக்கவசம் தனிமனித இடைவெளி ஆரோக்கிய உணவு ஆகியவற்றையும் பின்பற்ற வேண்டும்.