கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே தீப்பற்றியுள்ள MV X-Press Pearl கப்பலின் கொள்கலன் ஒன்று வெடித்துள்ளது.
கப்பலின் பணியாளர்கள் 25 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கப்பலில் இருந்து எட்டு கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளது. இதையடுத்து கடல் பகுதியை பாதுகாப்பதற்காக கப்பலை மேலும் 50 கடல் மைல் தொலைவிற்கு நபர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்றும் அபாயகரமான இரசாயனங்கள் இருக்கக்கூடும் என்பதால் எந்த மிதக்கும் பொருட்களையும் தொடுவதைத் தவிர்க்கவும் சமுத்திர பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.
மே 15 அன்று இந்தியாவின் ஹசிர துறைமுகத்தில் ஏற்றப்பட்ட 25 தொன் நைட்ரிக் அமிலம் மற்றும் பிற இரசாயனங்கள் உட்பட 1,486 கொள்கலன்களை இந்தக் கப்பல் ஏற்றிச் சென்றது.
அபாயகரமான சரக்குகளின் வேதியியல் எதிர்வினை காரணமாக தீ பரவல் தொடங்கியதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்குள் கப்பல் நுழைவதற்குக் காத்திருந்தபோது, MV X-Press Pearl கப்பலில் வியாழக்கிழமை தீ பரவல் ஏற்பட்டது.
தீயணைக்கும் பணிகள் இதுவரை வெற்றியடையாததை தொடர்ந்து, இலங்கை விமானப்படையின் பெல் 212 உலங்கு வானூர்தியொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.