ஆங் சான் சூகி வீட்டில் நலமாக இருக்கிறார், இன்னும் சில தினங்களில் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்றும் மியன்மார் இராணுவத் தலைவர் மின் அவுங் லைங் நேற்று கூறினார்.
கடந்த பெப்ரவரி 1ஆம் திகதியன்று நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின் அவர் அளித்துள்ள முதல் பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆட்சிக்கவிழ்ப்பு நடந்ததை அடுத்து கலவரம் ஓயாத நிலையில் மியன்மார் சிக்கியுள்ளது.
“ஆங் சான் சூகி நலமாக இருக்கிறார். அவரது வீட்டில் ஆரோக்கியமாக உள்ளார். இன்னும் சில நாட்களில் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை தொடங்கும்,” என்று மின் அவுங் லைங் பேட்டியில் குறிப்பிட்டார்.
75 வயது சூகி யின் செயல்திறன் பற்றி என்ன நினைக்கிறார் என்று கேட்கப்பட்டபோது, “அவரால் முடிந்த அனைத்தையும் முயற்சி செய்து பார்த்தார்“ என்று மின் அவுங் லைங் பதிலளித்தார்.
கடந்த நவம்பர் மாதம் சூகி யின் கட்சி வெற்றிபெற்றிருந்த தேர்தல், முறைகேடாக நடந்தது என்று அடையாளங்கண்டதை அடுத்து இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இருப்பினும், தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனும் இராணுவத்தின் கூற்றைத் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
தேர்தலை இராணுவம் ஏற்று நடத்தும் என்றும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசியல் அமைப்பில் மாற்றம் தேவைப்படும் அம்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும் மின் அவுங் லைங் கூறினார்.
திங்கட்கிழமையன்று சூகி நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்று கூறப்படுகிறது. இதுவரை அவர் காணொளி மூலமாகவே தோன்றியுள்ளார். அவரது சட்டத்தரணிகளுடனும் அவர் நேரடியாகப் பேச அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, இராணுவ ஆட்சிக்கு எதிராக இயங்கிவரும் ஓர் ஆயுதமேந்திய இனக்குழு, நேற்று இராணுவத் தளம் ஒன்றைத் தாக்கியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
நேற்று இராணுவத் தளம் மீது ‘கச்சின் சுய ஆட்சி இராணுவம்’ மேற்கொண்ட தாக்குதலில் அதிகமான கரும்புகை சம்பவ இடத்தில் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆட்சிக்கவிழ்ப்பை அடுத்து இராணுவத்திற்கும் கச்சின் சுய ஆட்சி இராணுவத்திற்கும் இடையே இத்தகைய மோதல் நிகழ்ந்து வருகிறது.



