குருந்தலூரில் ( குருந்தூர்) 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே தமிழர்கள்
வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம் உண்டு என
யாழ் பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறை சிரேஸ்ட பேராசிரியர் ப.
புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் . அவர் மேலும் தெரிவிக்கையில்,
வன்னிப் பிரதேசத்தில் உள்ள வரலாற்று பழமை வாய்ந்த முக்கிய வரலாற்ற
மையங்களில் குருந்தலூர் ( குருந்தூர்) ஒன்றாகும். பாலி இலக்கியங்களில்
இவ்விடம் குருந்தகம என்றும் தமிழில் இது குருந்தலூர் என்றும்
அழைக்கப்படுகின்றது. இந்த குருந்தலூர் என்பதே தொன்மைமையான தமிழ்
இடப்பெயர் என்பது ஒரு தொன்மையான ஆதாரமாக காணப்படுகின்றது.
இந்த குருந்தலூரில் பௌத்த மதம் பரவுவதற்கு முன்னர் குருந்தலூர்
(குருந்தூர்) அதன் சுற்றாடலிலும் ஆதி இரும்பு காலத்து பெருங்கற்கால
பண்பாட்டு இருந்துள்ளது. ஆகவே அந்தப் பண்பாட்டு மக்களில் ஒரு பிரிவினர்
பௌத்த மதம் பரவிய பொழுது அந்த மதத்தையும் தழுவியிருப்பார்கள் என்பதில்
ஐயமில்லை.
இந்த குருந்தலூர் (குருந்தூர்) 13 ஆம் நூற்றாண்டில் கலிங்கமாகன்
சாகவனுடைய ஆட்சியில் மிக முக்கிய ஒரு நகராக இருந்ததை
சூலவம்சமும், இராஜாவெலிய என்ற சிங்க இலக்கியமும் குறிப்பிடுகின்றது. இந்த
இடத்தில் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட லூயிஸ்,
வன்னிக் கையேடு என்று நூலில் தான் அந்த இடத்துக்கு சென்ற பொழுது
அங்கே பௌத்த கட்டிட எச்சங்களோடு இந்து ஆலயத்தின் எச்சங்களையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார். அதிலேயே நந்தியோடு உடைந்த நந்தியும் அதனோடு இணைந்த கட்டட அழிபாடுகளையும் தான் கண்டதாக அவர் குறிப்பிடுகின்றார்.
1870 ஆம் ஆண்டில் போல் என்பவர், தான் இந்த இடத்துக்கு சென்ற பொழுது பௌத்த கட்டிட எச்சங்களுடன் தமிழ் கல்வெட்டுடன் கூடிய இந்து ஆலயங்களின் வழிபாடுகளையும் கண்டதாகக் குறிப்பிடுகிறார். ஆகவே இந்த குருந்தலூர் (குருந்தூர்) என்பது பௌத்த இந்து ஆலயங்கள் தோன்றி வளர்ந்த இடங்களாக காணப்படுகின்றன.
அதில் அண்மையிலுள்ள பெரியகுளம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு கல்வெட்டுகளில் தமிழ் வணிகனான விசாகன் பௌத்த துறவிகளுக்கு புகை கற்படுக்கைகள் கொடுத்தது பற்றி கூறுகின்றது. வன்னிப் பிரதேசத்தில் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட முப்பத்தொன்பது கல்வெட்டுக்கள்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பிராகிருத மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டுகளை
ஆராய்ந்தால் அவற்றில் தமிழ் வரிவடிவம் தமிழ் மொழிக்கு என்று தனித்துமான
வரி வடிவம், தமிழ் பெயர்கள், தமிழ் உறவுமுறைகள், ராஜா என்ற அரச பட்டத்தை
சமமான வேள் என்ற பட்டம் கொண்ட பெயர்கள் தமிழ் இடப்பெயர்கள் காணப்படுகின்றன.
எனவே இந்த குருந்தலூரில் ( குருந்தூர்) 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே
தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு பாலி சிங்கள இலக்கியங்களில் ஆதாரம்
உண்டு. ஆகவே இந்த குருந்தலூர் ( குருந்தூர்) அகழ்வாய்வில் கிடைக்கும்
தொல்பொருள் சான்றுகளை வைத்துக்கொண்டுதான் அது பாலி சிங்கள இலக்கியங்கள் கூறுகின்ற உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தலாம் எனவும் தெரிவித்தார்.