சாணக்கியனும் மற்றும் தமிழ்-முஸ்லிம் பேரவையும் ஏன் கல்முனை ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துமாறு கேட்க முடியாது?
உண்மையான, இதய சுத்தியான தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை பேணுகின்றவர்களாக தமிழ்- முஸ்லிம் பேரவையினர் இருந்தால், மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு அந்தத் தவறினை விட்ட பிரதிவாதிகளாக உள்ள வைத்தியசாலை நிர்வாகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி நீங்கள் விட்ட தவறினை திருத்திக் கொண்டு மனித உரிமை ஆணைக்குழு வழங்கியுள்ள சிபாரிசுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள், இடமாற்றம் பெற்று சென்ற பெண் ஊழியர்களை உடனே அழைத்து இந்த சிபாரிசுகளை அமுல்படுத்துங்கள் என்ற ஒரு வேண்டுகோள் கடிதத்தையாவது வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அனுப்பவில்லை என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்,
கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஹிஜாப் பிரச்சினை ஏற்பட்ட பொழுது, அந்த பிரச்சினையை வேண்டுமென்றே கல்முனை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு ஹிஜாப் அணிவதை தடை செய்தது. இலங்கையில் இது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த சூழ்நிலையில், இது மத உணர்வோடு சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் அவசரமாக தமிழ் தலைமைகள் குறிப்பாக இரா.சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்களிடம் தலையிட்டு இந்த பிரச்சினை பூதாகரமாகாமல் கல்முனை வைத்தியசாலை நிர்வாகத்தோடு பேசி ஒரு சுமூக நிலைக்கு கொண்டு வருமாறு கேட்டிருந்தேன்.
ஆனால், அவர்கள் அதற்கு பதிலாக இது முஸ்லிம்களுடைய மத உணர்வு சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய பிரச்சினையாக இருந்தும் கூட அதை பொருட்படுத்தாமல் வைத்தியசாலை நிர்வாகம் செய்ததுதான் சரி. அவர்கள் சட்டப்படிதான் நடக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள். அது எனக்கு மட்டுமல்ல இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் கவலையை தோற்றுவித்திருந்தது.
குறிப்பாக தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக தமிழ் முஸ்லிம் பேரவை அமைத்து செயற்படுவதாக கூறப்படும் இந்த தருணத்தில் இந்த சிறிய பிரச்சினையில் கூட அவர்கள் நியாயத்தை சொல்லத் தைரியமில்லாமல் இனவாத சக்திகளோடு நிற்கிறார்கள் என்ற ஒரு ஆத்திரமும் ஆவேசமும் முஸ்லிம் சமூகத்திற்குள் ஏற்பட்டது. அப்போது கல்முனை மாநகர மருதமுனையை சேர்ந்த சகோதரர் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தலைமையிலான சில சட்டத்தரணிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து, அவர்களுடைய சட்டப்போராட்டத்தின் பின்பு இன்று மனித உரிமைகள் ஆணைக்குழு ஒரு நிலைப்பாட்டை (சிபாரிசினை) வெளியிட்டிருக்கின்றது. மட்டுமில்லாது எதிர்வரும் 2026.11.19 க்கு முன்னர் முதலாம் பிரதிவாதியும் ( பணிப்பாளர், கல்முனை ஆதார வைத்தியாசலை), பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதில் கல்முனை ஆதார வைத்தியசாலை அந்த பெண் ஊழியர்களின் அடிப்படை உரிமையை மீறியுள்ளது. அவர்கள் ஹிஜாப் அணிவதற்கு சகல உரிமையும் இருக்கின்றது என்ற அவர்களுடைய பல சிபாரிசுகளை முன்வைத்திருக்கிறது. உண்மையில் இந்த இடத்தில் உரிமைக்காக போராடிய நான் உட்பட இன்னும் ஐந்து பேருக்கு எதிராக அந்த வைத்தியசாலை பணிப்பாளர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார் என்பதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு நாங்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற நிலையில் இன்று அந்த தமிழ் முஸ்லிம் பேரவை சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் இரா.சாணக்கியன் எம்.பி அவர்கள் அறிக்கை வெளியிடுகிறார். அவரது அறிக்கையில் இந்த மனித உரிமை ஆணைக்குழுவின் சிபாரிசை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். இதைத்தான் சொல்வது பட்டறிவு ஞானம் என்று.
உண்மையாக இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால் தமிழ் முஸ்லிம் பேரவையில் உள்ள தலைவர்கள் மனித உரிமை ஆணைக்குழு வழங்கியுள்ள சிபாரிசுகளை உடனடியாக பின்பற்று வேண்டுகோள் கடிதத்தையாவது மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையின் சிபாரிசுகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு அந்தத் தவறினை விட்ட வைத்தியசாலை நிர்வாகத்திற்கு அனுப்பியிருக்கலாம். அதைக்கூட இவர்கள் அனுப்பவில்லை.
ஏனென்றால் இன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேர் கையொப்பமிட்டு பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா மற்றும் சட்டத்தரணிகள் குழு நேரடியாக சவூதி அரேபியாவுக்கு சென்று அந்த குழு முயற்சி செய்து மரணதண்டனை விதிக்கப்பட்ட சகோதரர் அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்துள்ளது. அந்த அளவுக்கு முஸ்லிம்கள் ஒரு இளைஞனுடைய உயிரை காப்பாற்ற பிரயத்தனங்களை எடுத்துள்ளனர்.
இப்படியான சூழ்நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலை நிர்வாகம் தான் தவறை விட்டுள்ளதே தவிர அரசாங்கம் தவறை விடவில்லை. ஏனென்றால் நாட்டில் ஏனைய வைத்தியசாலைகளில் வழமை போன்று ஹிஜாப் அணிந்துதான் பெண் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அரசாங்கம் எந்த தடையும் விதிக்கவில்லை. இந்த நிர்வாகத்தின் தவறை சுட்டிக்காட்டி மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை வந்த பின் கூட மௌனமாக இருக்கின்றது. இன்னும் அந்த முஸ்லிம் பெண் ஊழியர்களை மீள வருமாறு அழைப்பு கூட கொடுக்கவில்லை. இதனை ஏன் இந்த தமிழ் முஸ்லிம் பேரவை வைத்தியசாலை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்ப முடியாது?
பாராளுமன்றத்தில் சாணக்கியன் மட்டுமல்ல இன்னும் பலரும் அரசாங்கம் சுற்றுநிருபம் வெளியிட வேண்டும் என்று வாதிடுகிறார்கள். அது வாஸ்தவம்தான். அதை நான் உட்பட இன்னும் பல அமைப்புகள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் நேரடியாக கேட்டு இருக்கின்றோம். அது நிரந்தரமான தீர்வாக வரும். ஆனால், அதேசமயம் தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிக்கின்ற தமிழ் முஸ்லிம் பேரவை ஏன் ஒரு கூட்டாக இந்த வைத்தியசாலை நிர்வாகத்திற்கு ஒரு கோரிக்கையை விடுக்க முடியாது என்பதுதான் என்னுடைய கேள்வியாகும். இன்னும் ஆணைக்குழு அறிக்கை வந்த பின்பும் கூட ஏன் வைத்தியசாலை நிர்வாகம் மௌனம் சாதிக்க வேண்டும் என்பதே என்னுடையதும், சமூகத்தினதும் கேள்வியாகும் என்று தெரிவித்துள்ளார்.




